அமெரிக்காவிற்கு நெருக்கடியான நிலை ஏற்படும்போது அமெரிக்காவின் படை இலங்கையில் நிலைகொள்வதற்கான ஆபத்து இருப்பதாக முன்னிலை சோஷலிச கட்சியின் செயலாளர் புபுது ஜெயகொட எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது 2007 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடனான எக்சா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த 2017 ஆம் ஆண்டில் கால வரையறையின்றி நீடித்திருந்தார்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு நெருக்கடியான நிலைமை ஏற்படும் போது அவர்களது படை இலங்கையில் நிலை கொள்வதற்கு வழிவகுக்கும். ஆகவே, ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் யுத்த நிலைமை தொடர்பில் நாட்டு மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
அதேபோல், இலங்கை அமெரிக்காவின் சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பட்சத்தில் அமெரிக்க இராணுவம் இலங்கையில் தரித்து நிற்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். இது இலங்கைக்கு பேராபத்தான விடயமாகும் ஏனெனில், ஈரான் அமெரிக்காவிற்கு ஆதரவான நாடுகளின் மீதும் தாக்ககுதல் நடாத்துவதற்கு தயங்கப்போவதில்லை என்று எச்சரித்திருக்கின்றது.
ஆகவே , நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எக்சா ஒப்பந்தத்திலிருந்து விலகுவதுடன், சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
0 Comments