Home » » மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரையில் நான்கு தேசிய பாடசாலைகளும் ஏனைய பகுதிகளில் நான்கு பாடசாலைகளுமாக 8 பாடசாலைகள் தேசிய பாடசாலைககளாக தரமுயர்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரையில் நான்கு தேசிய பாடசாலைகளும் ஏனைய பகுதிகளில் நான்கு பாடசாலைகளுமாக 8 பாடசாலைகள் தேசிய பாடசாலைககளாக தரமுயர்கின்றன.

ஜனாதிபதியின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தரமுயர்த்தப்படவுள்ள பாடசாலைகளை தெரிவுசெய்யும் வகையிலான விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களின் கல்வி பணிப்பாளர்கள்,பிரதி கல்வி பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு கல்வி வலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறைகள்,வளப்பங்கீடுகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு தேசியக் கொள்கைக்கு இணைவாக கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட பணிபுரியும் நாட்டை மதியால் அழகுபடுத்துவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கையின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் குறைந்தது ஒரு தேசிய பாடசாலையையாவது உருவாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளிற்கு அமைய 2020ஆம் ஆண்டு முதலாம் மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதி அவர்களின் இந்த பணிப்புரைக்கமைய நாட்டின் கல்வி அமைச்சர் டளஸ் அழகபெரும அவர்கள் எனக்கொரு கடிதத்தை கையளித்திருக்கின்றார்.

ஜனாதிபதியின் இந்த எண்ணக்கருவை நடைமுறைப்படுத்துவதற்கு வருகின்ற இரண்டாம் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் தேசிய பாடசாலையை உருவாக்கும் செயற்றிட்டம் இருப்பதனால் எங்களுடைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 14பிரதேச செயலாளர் பிரிவுகள் இருக்கின்றன,குறிப்பாக முஸ்லிம் மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் 6 தேசிய பாடசாலைகள் இருக்கின்றன, 75வீத தமிழ் மக்கள் வசிக்கின்ற மட்டக்களப்பில் தமிழ் மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் 7தேசிய பாடசாலைகள்தான் இருக்கின்றன.

கடந்த அரசாங்கத்திலே செங்கலடி மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக மாற்றித் தாருங்கள் என்று கூறி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். பாராளுமன்றத்திலும் முன்வைத்தோம். ஆனால் அதனை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த முடியவில்லை.

துற்போதைய புதிய அரசாங்கத்திடம் வைத்த வேண்டுகோளிற்கு அமையவும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு அமையவும் எங்களின் வேண்டுகோளிற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  8தேசிய பாடசாலைகள் கிடைத்திருக்கின்றன.

அந்த வகையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குள் கதிரவெளி மகாவித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக நாங்கள் தெரிவு செய்திருக்கின்றோம். ஆத்துடன் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் கிரான் மகாவித்தியாலயத்தை தேசிய பாடசாலையாகவும் ஏறாவூர்;பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குள் செங்கலடி மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாகவும் நாங்கள் தெரிவு செய்திருக்கின்றோம்.

அத்துடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குள் ஒரு தேசிய பாடசாலையும் வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குள் ஒரு தேசிய பாடசாலையுமாக எங்களுடைய வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களுடன் பேசியிருக்கின்றேன். அதற்கமைய பாடசாலையின் பெயரை இன்று அவர் கையளித்திருக்கின்றார்.

புட்டிருப்பு கல்வி வலயத்திற்குள் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குள் ஒரு தேசிய பாடசாலையும் இல்லாததால் அங’கும் ஒரு தேசிய பாடசாலையை உருவாக்க நாங்கள் திட்டமிட்டிருக்கின்றோம். அதுபோன்று மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு நகரில் நான்கு தேசிய பாடசாலைகள் உள்ளன.ஆனால் மண்முனைப்பற்றில் எந்த தேசிய பாடசாலையும் இல்லை.அதனால் ஆரையம்பதி மகா வித்தியாலயத்தினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.அதேபோன்று வவுணதீவில் கன்னங்குடா மகா வித்தியாலயத்தினையும் தேசிய பாடசாலையான தரமுயர்த்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.ஏனைய தேசிய பாடசாலைகள் தொடர்பில் வலய கல்வி பணிப்பாளர்களுடன் கலந்துரையாடப்படுகின்றன.எதிர்வரும் நான்காம் திகதிக்கு முன்பாக கல்வி அமைச்சிடம் இதனை நாங்கள் ஒப்படைக்கவேண்டும்.

இந்த எட்டு தேசிய பாடசாலைகளும் நூறு நாட்களுக்குள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.அதனை தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் பிரதேச செயலகங்கள் தோறும் இரண்டு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டினுடைய கல்விசார்ந்த முன்னேற்றத்திலும் கிராம மட்டத்திலும் கல்வி ரீதியான பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற ரீதியில் ஜனாதிபதி அவர்கள் ஒரு உன்னத எண்ணக்கருவினை கொண்டுசெயற்படுகின்றார். அதனை செயற்படுத்துகின்ற பணிகளை கல்வி அமைச்சரும் மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் மேற்கொள்கின்றோம் என்றார்.












Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |