Home » » கல்முனை மாநகர முதல்வர் பொது மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்!

கல்முனை மாநகர முதல்வர் பொது மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்!



(அஸ்லம் எஸ்.மௌலானா)
கடந்த பல நாட்களாக பெய்து வருகின்ற மழையினால் குப்பை கொட்டுகின்ற பிரதான இடமும் போக்குவரத்து பாதையும் பாதிக்கப்பட்டிருப்பதனால் திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் தமது வீடுகளில் சேர்கின்ற குப்பைகளை சில தினங்கள் தமது இடங்களிலேயே வைத்து, முகாமைத்துவம் செய்து கொள்ளுமாறு கல்முனை மாநகர சபை வேண்டுகோள் விடுக்கின்ளது.

இது தொடர்பாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் கருத்துத் தெரிவிக்கையில்,

கல்முனை மாநகர சபையினால் அன்றாடம் சேகரிக்கப்படுகின்ற குப்பைகள் பெரிய நீலாவணையில் அமைந்துள்ள பசளை தயாரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தரம்பிரிக்கப்பட்ட பின்னர் அக்குப்பைகள் அங்கிருந்து அட்டாளைச்சேனை பள்ளக்காடு எனுமிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கொட்டப்படுவதே வழமையான நடைமுறையாகும்.

தற்போது பெரிய நீலாவணை பசளை தயாரிப்பு நிலையத்திற்கு செல்கின்ற கடற்கரை வீதி மழையினால் சேதமுற்றிருப்பதனால் அவ்வீதியூடாக எமது மாநகர சபையின் கனரக வாகனங்கள் குப்பைகளை ஏற்றிச்செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

அதேவேளை, வெள்ள நிலைமை காரணமாக அட்டாளைச்சேனை பள்ளக்காடு பகுதியில் குப்பை கொட்டுவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருக்கிறது. கல்முனை மாநகர சபை எல்லைக்குள் குப்பை கொட்டுவதெற்கென்று ஓர் இடம் இல்லாமையினாலேயே பள்ளக்காடு பகுதிக்கு எமது குப்பைகள் எடுத்துச் செல்லப்பட்டு, கொட்டப்பட்டு வந்தன. தற்போது அந்த இடத்தையும் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தாற்காலிகமாகவேனும் குப்பை கொட்டுவதற்குரிய இடமொன்றை அடையாளம் கண்டு, பெற்றுக்கொள்வதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். அது அடுத்த சில தினங்களில் சாத்தியப்படும் என எதிர்பார்த்துள்ளோம்.

அதுவரை இப்பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் தமது வீடுகளில் சேர்கின்ற குப்பைகளை சில தினங்கள் மாத்திரம் தமது இடங்களிலேயே வைத்து, முகாமைத்துவம் செய்து, மாநகர சபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பான வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இந்நாட்களில் வீதிகள், பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் குப்பைகளை வீசுவதை தயவுசெய்து தவிர்ந்து கொள்ளுமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |