Home » » தேர்தல் முடிவுகளின் ஊடாக ஸ்ரீலங்கா ஒற்றையாட்சி நாடு என்பதை மக்கள் உறுதிசெய்திருகின்றனர்; நாமல்!

தேர்தல் முடிவுகளின் ஊடாக ஸ்ரீலங்கா ஒற்றையாட்சி நாடு என்பதை மக்கள் உறுதிசெய்திருகின்றனர்; நாமல்!

ஸ்ரீலங்காவின் அரசியலில் தீர்க்கமான சக்தியாக இனி தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்காது என்ற தெளிவான பதிலை இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கியிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் முடிவுகளின் ஊடாக ஸ்ரீலங்கா ஒற்றையாட்சி நாடு என்பதை மக்கள் உறுதிசெய்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச கூறினார்.

நடைபெற்றுமுடிந்த ஸ்ரீலங்காவின் 08ஆவது ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலை வகித்து வருகின்றார்.

இந்த நிலையில், பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச, இந்த வெற்றி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

வடக்கு, கிழக்கு தமிழர் பிரதேசங்களில் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்த போதிலும் அதனை மீறி மக்கள் கனிசமாக வாக்குகளை அவருக்கு வழங்கியிருப்பதால் இனி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வார்த்தைகள் செல்லாக்காசாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

தெற்கிலுள்ள மக்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அதேபோல வடக்கு, கிழக்கு மக்களும் கனிசமான வாக்குகளை வழங்கியுள்ளனர். ஆகவே இப்போது சஜித் பிரேமதாஸவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் உண்மையிலேயே அவருக்கு வழங்கப்பட்ட வாக்குகள் அல்ல, அவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக அளிக்கப்பட்ட வாக்குகளாகும். உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை அங்கிருந்து நீக்கினால், அவர்களும் சஜித் பிரேமதாஸ கூட்டணியிலிருந்து நீங்க வேண்டும். இந்த நிலையில், இந்த நாட்டின் தீர்க்கமான சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இல்லை என்ற பதிலை மக்களுக்கு வழங்கியுள்ளனர். அதேபோல எந்தவித அழுத்தங்களுக்கு மத்தியிலும் கோட்டாபய ராஜபக்சவுக்காக வடக்கு, கிழக்கு மக்கள் கனிசமான வாக்குகளை அளித்துள்ளனர். இன்று நாட்டு மக்கள் அனைவரும் வாக்களித்திருக்கின்றனர். அதனூடாக ஒற்றையாட்சி என்கிற விடயத்தை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பது தெளிவாகின்றது”.

இதேவேளை, அரசியல் பழிவாங்கல் அற்ற ஒரு புதிய அரசியல் பயணத்தை கோட்டாபய ராஜபக்ச தொடரவுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் மஹிந்த ராஜபக்சவுக்காக கோட்டாபய ராஜபக்சவை மக்கள் அதிக வாக்குகளால் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். அம்பாந்தோட்டையில் 100 வருடங்கள் ராஜபக்சவினர் அரசியல் செய்துள்ளனர். அதேபோல இந்த மாவட்டத்தைப் போன்றே ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் கோட்டாபய ராஜபக்ச மீது அதீத நம்பிக்கையை வைத்து வாக்களித்திருக்கின்றனர். கடந்த 04 வருடங்களாக நாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டோம், பல்வேறு அரசியல் பழிவாங்கல்களுக்கும் முகங்கொடுத்தோம். சிறைகளுக்கும் சென்றோம். பலவந்தமாக பொய்சாட்சி சொல்லவும் சிலரை தூண்டினார்கள். இவ்வாறு அனுபவித்த கஸ்டங்களுக்கான மக்களின் பிரதிபலனாக இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. அன்று மஹிந்த ராஜபக்ச பொதுஜன முன்னணி கட்சியை அமைத்தபோது ஆதரவு வழங்கிய அனைவருக்கும் இன்று நன்றி தெரிவிக்கின்றோம். அரசியல் பழிவாங்கலின்றி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் புதிய அரசியல் பயணத்தை தொடர்வதற்கு கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆயத்தமாகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |