Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு வைத்தியசாலையில் மீண்டும் சர்ச்சை


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின்போது சிசுவொன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிசுவின் உறவினர்களால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு முகத்துவாரத்தைச் சேர்ந்த 30வயதுடைய பெண்னொருவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து சுகப்பிரசவம் மூலமே குழந்தையினைப் பெறவேண்டும் என வைத்தியர்கள் கூறிய நிலையில், சத்திரசிகிச்சை மூலம் குழந்தையினை வெளியில் எடுக்குமாறு உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  புதன்கிழமை குறித்த பெண்ணுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பிரசவிக்கப்பட்ட சிசுவை யாரிடமும் காண்பிக்காமல் கழிவுகள் போடும் பெட்டியொன்றுக்குள் போட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிசுவின் தலைப்பகுதியில் பலத்த காயம் காணப்பட்டதாகவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே சத்திரசிகிச்சை மேற்கொண்டபோது கத்தரிக் கோலினால் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாமென உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த குழந்தை தொடர்பான தகவல்களை வழங்காமல் வைத்தியர்களும் தாதியர்களும் மறைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டதாகவும் உயிரிழந்த சிசுவின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளர்.

குறித்த தாய் தொடர்ச்சியாக மருத்துவ சோதனைகளை மேற்கொண்டுவந்த நிலையிலும் சிசு ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இவ்வாறு சிசு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனவே முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் 3 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்ததுடன் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் கவனக் குறைவின் இன்னொரு சம்பவமாக இந்த சிசு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments