Home » » சஹ்ரானை போன்றவராகவே நான் ஹிஸ்புல்லாஹ்வை பார்க்கிறேன்: கோத்தாபாயவை ஜனாதிபதியாக்க முயற்சிக்கும் முஸ்லிங்கள் சமூக விரோதிகளே- மன்சூர் எம்.பி.

சஹ்ரானை போன்றவராகவே நான் ஹிஸ்புல்லாஹ்வை பார்க்கிறேன்: கோத்தாபாயவை ஜனாதிபதியாக்க முயற்சிக்கும் முஸ்லிங்கள் சமூக விரோதிகளே- மன்சூர் எம்.பி.

(அபு ஹின்ஸா)

வேட்பாளர் சஜித்தை ஜனாதிபதி ஆசனத்தில் அமரவைக்க சகல கட்சியினதும் கூட்டாக சம்மாந்துறையில் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட தனது தலைமையிலான அணி தயாராக இருப்பதாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்ஸூர் தெரிவித்தார். 

நேற்று மாலை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் முன்னிலையில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

சிறுபான்மைகள் இல்லாத நாடாக இலங்கையை மாற்றியமைத்து பௌத்த தேசியத்தை அமுல்படுத்த படிப்படியாக வேலைத்திட்டங்களை செய்துவரும் மொட்டு அணி இந்த நாட்டை இனவாத பரப்புரையால் வெற்றிகொள்ள எத்தனிக்கிறது. அவர்களுடன் இணைந்து சரணாகதி அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை.

எங்களுக்கிடையில் இருக்கின்ற சில முரண்பாடுகளினால் சாதாரணமாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு நாங்கள் சஹ்ரானின் தோழர்களாக சித்தரிக்கப்பட்டு மிகப்பெருமதியான கஷ்டத்தை கடந்த ஏப்ரல் குண்டுவெடிப்புக்கு பிறகு அனுபவித்துள்ளோம். சம்மாந்துறையில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிமருந்துகளின் பின்னர் சம்மாந்துறை  இராணுவத்தினால் மிகவும் இறுக்கமானது. மாதவாடகைக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி உபத்திரமானதாக மாறியது. என்னுடைய சாரதி அடங்கலாக பல அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடந்த வரலாறு மிகவும் கொடுமையானது. 

எந்த நேரத்திலும் முஸ்லிங்கள் மீது பயங்கரவாதி எனும் குற்றசாட்டை முன்வைத்து கைது செய்யப்படும் நிலை இருந்துவந்தது. எமது பெண்களின் வாழ்க்கை மிகவும் அடங்கி ஒடுங்கி வாழவேண்டி வந்தது. இதற்க்கு காரணம் சமூக பற்றாளனாக தன்னை அடையாளப்படுத்திய ஒருவனின் ஈன செயலே. சமூகத்தின் மீது அக்கறை இருப்பது போல காட்டிக்கொண்டு வெளியே வருகிறவர்கள் மீது கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. சஹ்ரானை போன்றவராகவே நான் ஒட்டக வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வை பார்க்கிறேன். 

வேட்பாளர் கோத்தாபாயவை ஜனாதிபதியாக்க யார்யாரெல்லாம் முயற்சிக்கிறார்களோ அவர்களையெல்லாம் நான் சமூக விரோதிகளாகவே பார்க்கிறேன். அவர்களிடம் வேட்பாளர் கோத்தாபாயவை ஆதரிக்க வேண்டிய தேவை என்ன  என்பதற்கான காரணம் இல்லை. நாங்கள் வேட்பாளர் சஜித்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் அதற்காக குருடன் யானையை பார்த்தது  போல இருக்க முடியாது. 

வேட்பாளர் கோத்தாபாயவுக்கு பின்னால் உயிரை பாதுக்க வேண்டி அணிவகுத்தோ வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பின்னால் முட்டாள் தனமாகவோ இந்த சமூகம் செல்ல முடியாது.இவர்கள் கூறித்திரிவது போன்று  இந்த நாட்டிலிருந்து எம்மை துரத்த யாருக்கும் அதிகாரமில்லை. இந்த நாட்டின் தேச பற்றாளர்களாக,பங்குதாரர்களாக எங்களை நிரூபித்து கொண்டுதான் வாழ்ந்துவருகிறோம். இந்த சமூகத்திற்க்கு  இப்போது இருக்கின்ற மிகப்பெரிய சவாலும் எதிரியும் ஹிஸ்புல்லாஹ்வே. வேட்பாளர் கோத்தாபாயவுக்கு முஸ்லீம் வாக்குகள் தேவையில்லை. அதனால்  முஸ்லிம் தலைவர்களிடம் பேசவேண்டிய அவசியமுமில்லை. 

எமது தலைமையான அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கு இருக்கும் ஆளுமை, பக்குவம் என்பன வேறு யாருக்குமில்லை. சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களுக்கு அவர் பதிலளிக்கவேண்டிய தேவையில்லை. எமது பொது எதிரியாக உள்ள வேட்பாளர் கோத்தாபாயவை தோற்கடிக்க சம்மாந்துறை தொகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி என்பனவற்றை இணைத்துக்கொண்டு சஜித்தின் வெற்றிக்காக உழைக்கப்போகிறோம். சம்மாந்துறையில் அமைச்சர் றிசாத் கலந்துகொள்ளும் மேடைக்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அழைத்தால் நாளை மேடையேற தயாராக உள்ளேன் என்றார். 

இக்கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.மாஹீர், ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸனலி, அடங்கலாக முஸ்லீம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். 

UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |