Home » » இனவாத அரசியல் செய்வதை இலக்காக கொண்ட ஹிஸ்புல்லா முடியுமாக இருந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் : மன்சூர் எம்.பி சவால் !!

இனவாத அரசியல் செய்வதை இலக்காக கொண்ட ஹிஸ்புல்லா முடியுமாக இருந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் : மன்சூர் எம்.பி சவால் !!

(நூருல் ஹுதா உமர்)

ஏனைய சகோதர இன மக்களை இனவாதக் கண்கொண்டு பார்த்து அவர்களோடு முட்டி மோதி அரசியல் செய்கின்ற ஒரு ஈன செயலை செய்து கொண்டிருக்கின்ற சகோதரர் ஹிஸ்புல்லா அவர்களோடு வாதிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அமைச்சர் ரவுப் ஹக்கீம் தேவையில்லை அவருடைய அடிப்படை போராளியே போதுமானவன் என அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஐ எம் மன்சூர் தெரிவித்தார்.

இன்று மாலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் அங்கு பேசியதாவது,

தமிழ் சமூகம் மாத்திரமல்ல முஸ்லிம் சமூகமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களே ஆதரிப்பதற்கான எந்தவித முடிவுகளையும் எடுக்க மாட்டார்கள்.நாங்கள் தேசிய ரீதியாக சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைப்பாட்டில் இருக்கின்றோம் ஆகவேதான் வெற்றி பெற சாத்தியமான ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கத்தை நாங்கள் தெரிவு செய்துள்ளோம்.

இந்தக் காலகட்டத்தில்தான் சகோதரர் ஹிஸ்புல்லா அவர்கள் தன்னை ஒரு வேட்பாளராக நிறுத்தி எந்தவித எதிர்கால தூர நோக்கமும் இன்றி ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் கேள்விக்குட்படுத்தி அவர்களை படு பாதாளத்திற்கு தள்ளுகின்ற ஒரு செயற்பாட்டிற்கு இவ்வாறான ஒரு முடிவினை எடுத்து இருக்கின்றார்.

35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற இந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையாக இலங்கையில் வாழ்கின்ற நாம்  ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை என்று தெரிந்திருந்தும் சகோதரர் ஹிஸ்புல்லா அவர்கள் இந்த முடிவினை எடுத்து இருக்கின்றார். இந்த வேட்பாளர் நியமன விடயத்தில் உண்மையான தார்ப்பரியம் என்னவென்றால் முஸ்லிம் மக்கள் ஒருபோதும் கோத்தாபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரிக்கப் போவதில்லை என்பதை நன்றாக அறிந்து முஸ்லிம் மக்களுடைய வாக்குகள் சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு செல்லக்கூடாது என்பதற்காக இவ்வாறான ஒரு முடிவினை ஒப்பந்த அடிப்படையில் கோதபாய ராஜபக்ஷ அவர்களும் முன்னாள் ஆளுநர் சகோதரர் ஹிஸ்புல்லா அவர்களும்  எடுத்திருக்கிறார்கள் என்பது தான் தெளிவான உண்மையாகும்.

இந்த செயற்பாடானது முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களுடைய தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற ஒரு கபடத்தன நாடகமாகும்.தன்னை இந்த சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்ட ஒருவராக காட்டிக் கொள்வதில் மாத்திரமே அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ தவிர அவர் அப்படி நடப்பதாக எனக்கு ஒருபோதும் தெரிவதில்லை.

 மட்டக்களப்பில் அமைக்கப்பட்டிருக்கின்ற கேம்பஸ்  அவருடைய தனிப்பட்ட ஒரு நலனுக்காக உருவாக்கப்பட்டது அன்றில் அது சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட ஒன்றும் அல்ல என்பதே என்னுடைய பார்வையாகும்.அது சம்பந்தமான தகவல்கள் தேவைப்படுகின்றன  போது அது சம்பந்தமாக விலாவாரியாக தருவதற்கு நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார் என்பதுதான் சமீப காலத்தில் அவர் அடைந்த சாதனையாகும். அதிகமான காத்தான்குடி மக்கள் அவரை விரும்பினாலும் எதிர் வருகின்ற காலங்களில் அவரை மக்கள் பெறுகின்ற நிலை வரும் என்பதை நான் கூறி வைக்க விரும்புகின்றேன்.

அவருடைய நிலைப்பாட்டிலும் கொள்கையிலும் அவர் சரி கண்டு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அவரோடு விவாதிப்பதற்கு எங்களுடைய கட்சியினுடைய தேசியத் தலைமை கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தேவையில்லை கட்சியினுடைய அடிப்படை போராளியாக இருக்கின்ற நான் அவரோடு விவாதிப்பதற்கு தயாராக இருக்கின்றேன். அதற்கான சந்தர்ப்பத்தை இலங்கையில் இருக்கின்ற சகல ஊடகங்களும் ஒன்றிணைந்து எனக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.எங்கு எப்போது விவாதிக்க வேண்டும் என்பதை சகோதரர் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்கள் அறிவித்தால் அவரோடு நேரடியாக விவாதத்தில் ஈடுபட நான் தயாராக இருக்கின்றேன்.

மேலும் இன்றைய தினம் கட்சியின் தலைமை காரியாலயமான தாருஸ்ஸலாமில் வைத்து முன்னாள் மாகாண சபை உறுப்பினராக இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவர் ஏ. எம்.ஜெமில், முன்னாள் மாகாண அமைச்சராக இருந்த தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் எம். எஸ் உதுமாலெப்பை ஆகியோர்கள் தங்களுடைய தாய் கட்சிக்கு இன்று திரும்பி வந்து இருப்பதை நான் பெருமிதத்துடன் வரவேற்கின்றேன் என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |