Home » » ரணில் குழப்பத்தில் உள்ளார்: கருணா

ரணில் குழப்பத்தில் உள்ளார்: கருணா

தேர்தலில் தான் போட்டியிடுவதா அல்லது அமைச்சர் சஜித் போட்டியிடுவதா என்ற குழப்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கிறார் என முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - கிரான், பொதுச் சந்தை கட்டிடத் தொகுதியில் இன்று தமது கட்சி அலுவலகத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
குறிப்பாக சொல்லப் போனால் 134 அரசியல் கைதிகள் தற்போது சிறையில் உள்ளனர். ஒரு கைதியினைக் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்யவில்லை.
அரசினால் களத்தில் இருந்து நேரடியாக வந்த 12,000 போராளிகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புனர்வாழ்வளித்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்.

இன்று தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசிற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், தமிழர்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைத்ததில்லை.
இதில் ஒரு மாற்றத்தினை கொண்டுவரும் முகமாகவே மகிந்த ராஜபக்சவினால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவினை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.
வெற்றி என்பது நிச்சயம். இன்று ரணில் விக்ரமசிங்க பெரும் குழப்பத்தில் உள்ளார். தான் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது சஜித் போட்டியிடுவதா என்ற குழப்பத்தில் உள்ளார்.
சஜித் வந்து என்னத்தை செய்வார்? அவரது தந்தை கடந்த காலத்தில் புரிந்த வன்முறைகள் தெரியுமா? இப்போதைய இளைஞர்களுக்கு எதுவும் புரியாது. சஜித் என்றவுடன் ஒரு மோகம்.
மட்டக்களப்பில் 500 வீடுகளைக் கூட கட்டிக் கொடுக்கவில்லை. எங்களது ஆட்சியில் 5000 வீடுகளை கட்டிக்கொடுத்தோம். அதில் பயனாளிகள் எதுவித பணமும் செலுத்த வேண்டியதில்லை. இவர் கொண்டு வந்த வீடுகளுக்கு 2 இலட்சம் ரூபாய் மக்கள் செலுத்த வேண்டும் என விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |