ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதியும், மக்கள் பலத்தை நிரூபிக்கும் மாபெரும் கூட்டத்தை ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியும் நடத்தவுள்ளோம்.
நேற்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பட்டதன் பின்னர் சிறிகொத்தவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களிடம் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுக்க கட்சியின் மத்திய செயற்குழுவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவும் பிரதமர் தலைமையில் கூடி இணக்கம் கண்டது. அதன்பிரகாரம் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்தத் தீர்மானம் மத்திய செயற்குழுக் கூட்டத்திலும் அதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது எனவும் தெரிவித்தார்.
இதன்போது தேர்தல் முறைமையில் மாற்றங்களைக் கொண்டுவருவதல் மற்றும் பிரதமரின் இணக்கப்பாட்டுக்கு அமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழித்தல் உள்ளிட்ட எமது அரசு இணக்கம் தெரிவித்த அரசமைப்பு முறைமையை உருவாக்குதல் என அனைத்து முக்கிய விடயங்களையும் நிறைவேற்றுவது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் பிரதமர் மற்றும் கட்சியின் தலைமைப் பதவி ரணில் விக்கிரம சிங்கவிடம் தொடர்ந்தும் இருக்கும். இதற்கும் அனைவரும் இணைக்கம் தெரிவித்தனர். எமது ஜனாதிபதி – எமது பிரதமரின் தலைமையில் ஆட்சியை உருவாக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
அத்துடன் நாம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியாக இணைந்து பரந்த கூட்டணியாகத் தேர்தலில் களமிறங்கவுள்ளோம். இதுவரை எம்முடன் இணையாத கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பரந்த கூட்டணியாகப் போட்டியிட்டு வெற்றியைப் பெற்றுக்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
0 Comments