Home » » குண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும்!

குண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும்!

குண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும் என நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (12) மாலை இடம்பெற்ற மாதர்களுக்கான மனித உரிமை தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தில் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் தேசகீர்த்தி எம்.ரி கபூர் தலைமையில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
இஸ்லாம் என்பது மனித உரிமையை அங்கீகரித்த ஒரு மார்க்கம். ஒரு மனிதன் வாழ்வதற்கு எவையெல்லாம் அவசியமோ அவைகளை அடிப்படை உரிமைகள் எனலாம். அவற்றும் உணவு நீர், உறைவிடம் மற்றும் மத சுதந்திரம் என்பவை உள்ளடக்கப்படும். வாழும் இடத்தில் மனிதன் தன் சுதந்திரம் பறிக்கப்பட்டால் அல்லது மேற்சொன்ன விடயங்கள் சூறையாடப்பட்டால் அதனை மனித உரிமை மீறல் எனலாம். அப்படியான மனித உரிமை மீறும் சம்பவங்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதில் மதஸ்தலங்கள் தாக்கப்படுதல், வியாபார ஸ்தானங்கள் தாக்கப்படுதல், மத அடிப்படையிலான ஆடைகளுக்கு தடை விதிப்பு, ஏனைய மதத்தை பின்பற்றும் கடும்போக்குவாதிகளால் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுதல், என்பன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து மனித உரிமைகள் ஆணையகம், ஹியுமன் றைட்ஸ் வொச் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் இவைகள் நிறுத்தப்படுவதாக இல்லை. இந்த செயற்பாடுகளை எமது பேரவை கண்டிக்கிறது.
அத்துடன் போதைப்பொருளை பாரிய அளவில் கடத்தும் நபர்களுக்கு எதிராக அதிக பட்ச தண்டணையாக மரண தண்டனை வழங்க வேண்டும்.அண்மையில் எமது நாட்டில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும். அதை அவர் செய்யவில்லை என்பது தான் இங்கு கேள்விக்குட்படுத்த வேண்டியதாகும்.எனவே எமது கணவர்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை மனைவியாக, தாயாக, நாம் பொறுப்புணர்வுடன் அறிந்து நடக்க வேண்டும்.அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை தடுக்க பெண்கள் முன்வர வேண்டும்.அவ்வாறு நடந்தால் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள பாரிய அனர்த்தங்களை எம்மால் தடுக்க முடியும்.
தற்போது இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் அதிக செயற்பாடுகள் எதிர்காலத்திற்கு உகந்தவையாக இருக்காது. அவை நல்லிணக்கத்திற்கு எதிரானதாகவே காணப்படும். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டுமென்று ஒரு சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் விசம பிரச்சாரங்கள் அச் சமூகத்தின் உரிமகளை பறிப்பதை எவரும் ஏற்க போவதில்லை.
இதற்கான உடனடி தீர்வை சம்பந்தப்பட்ட அனைவரும் எடுக்க வேண்டும். மத அடிப்படையிலான ஆடை விடயத்திற்காக உரிய தீர்வு உடன் எடுக்கப்படவேண்டும் கடும்போக்குவாத மத அமைப்புகள் எதிர்காலத்தில் தடை செய்யப்பட வேண்டும். அவ்வமைப்புகள் பிரச்சாரம் செய்வதை தடை செய்ய வேண்டும் இவ்வாறு செய்வோமானால் எமது மனித உரிமைகள் பாதுாகாக்கப்பட்டு நீதி பேண உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.
இந்த மாதர்களுக்கான மனித உரிமை தொடர்பான கருத்தரங்கில் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் தேசகீர்த்தி எம்.ரி கபூரும் உடனிருந்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |