Home » » கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள ஆள் அடையாள அட்டை விநியோகத்தில் நிதி குளறுபடிகள்

கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள ஆள் அடையாள அட்டை விநியோகத்தில் நிதி குளறுபடிகள்

நாட்டின் தற்போதைய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கல்விப் பணிப்பாளர்களின் கையொப்பத்துடன் பாடசாலைகளில் விநியோகிக்கப்படும் திணைக்கள ஆள் அடையாள அட்டைகளில் பல்வேறான நிதிக் குளறுபடிகள் இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றையும் அனுப்பியுள்ளார். குறித்த அறிக்கையில்,
கிழக்கு மாகாணத்திலுள்ள வலய கல்வித் திணைக்களங்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாடசாலைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெற்றோர்களிடம் இருந்து பெருந்தொகைப் பணம் அறவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆள் அடையாள அட்டை விநியோகிப்பதற்கு அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களிடம் இருந்து வெவ்வேறான தொகைப்பணம் அறவிடப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக மட்டக்களப்பு கல்வி வலயத்தில் அமைந்துள்ள பிரபல தேசிய பாடசாலையில் ஆசிரியர்களிடம் இருந்து புகைப்படத்துடன் 200 ரூபாய் அறவிடப்பட்டுள்ள நிலையில், அதே கல்வி வலயத்திலுள்ள சில தேசிய பாடசாலைகளில் புகைப்படத்துடன் 300 ரூபாய் தொடக்கம் 350 ரூபாய் வரை அறவிடப்பட்டுள்ளது.
மேலும் பல மாகாண பாடசாலைகளில் சம தராதரத்துடன் ஒரே நிறுவனத்தில் அச்சிடப்படும் இத்திணைக்கள அடையாள அட்டைகள் 300 ரூபாய் தொடக்கம் 350 ரூபாய் வரை அறவிடப்படுகின்றது.
இவ் திணைக்கள அடையாள அட்டை விநியோகம் தொடர்பாக நிதிப்பிரமானம் சட்ட விதிகளுக்கு அமைவான விலைமனு கோரப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாண கல்வி வலயங்களில் நடைபெற்ற பரீட்சை குளறுபடிகளில் பல்வேறு நிதி மோசடிகள் கண்டறியப்பட்டு 2ஆம் தவணை பரீட்சைகள் யாவும் பாடசாலை மட்டத்தில் நடைபெறுகின்றது.
இம் மோசடிகள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்விச் செயலாளர் மாகாண கணக்காய்வாளர் நேரில் சென்று முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பல்வேறான விசாரனைகள் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களங்களால் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணமும், பெறுமதிமிக்க உட்ச பயன் பெறக்கூடிய மனித வளங்களும், கல்வியமைச்சின் ஆய்வுக்கான முறையியலுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகையான பணம் வீண்விரயமாக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண கல்வி வீழ்ச்சிக்கும் வினைத்திறனற்ற செயற்பாடுகளுக்கும் வகை சொல்ல வேண்டியவர்கள் தொடர்ந்து பதவியில் இருப்பதை சங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |