Home » » பதவி விலகிய பின் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்த தகவல்!

பதவி விலகிய பின் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்த தகவல்!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தின் பின்னால் முஸ்லீம்களை இலக்கு வைத்து வன்முறைகளை தூண்டிவிடும் சதித்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பதவி விலகிய கிழக்கு மகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அறிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து தனது பதவிவிலகல் கடிதத்தை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே ஹிஸ்புல்லாஹ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதிக்கு தீர்மானிக்கும் அதிகாரம் இல்லை என்று கூறிய எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட தற்கொலைதாரிகளுடன் தொடர்புகளை பேணியதாக குற்றம்சாட்டி அமைச்சர் ரிசாத் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யுமாறு போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையிலேயே இந்த பதவி விலகல்கள் இடம்பெற்றுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகிய ஹிஸ்புல்லாஹ், ரத்தன தேரரின் உண்ணாவிரதத்தின் பின்னணியில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் முஸ்லிம் மக்களுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தினார்.
“என்னையும், அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் ராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுத்து இரத்தின தேரர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அதன் ஊடாக நாடு மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஞானசார தேரரின் தலைமையில் முஸ்லிம் மக்களுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடி நானும் அசாசாலியும் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தோம். ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். அமைச்சர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதியால் தீர்மானம் எடுக்க முடியாது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் அவரை பதவிநீக்குமாறு பிரதமர்இ ஜனாதிபதியிடம் கூறவேண்டும்”.
மினுவாங்கொடை குருநாகல் பிரச்சினைகளின்போது முஸ்லிம்களுக்கு யாரும் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சுமத்திய ஹிஸ்புல்லாஹ், தனது விவகாரத்தை முன்னிறுத்தி அவ்வாறான பிரச்சினைகளை மீண்டும் தோற்றுவிக்க இடமளிக்க தான் தயாரில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“நான் ராஜினாமா செய்யாமல் இருந்திருக்கலாம். எனினும் பாரிய பிரச்சினை ஏற்பட்டு எனக்கு தெரிந்த வகையில் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் தருவார்கள் என்பதில் பிரச்சினை உள்ளது. மினுவாங்கொடை - குருநாகல் பிரச்சினையின்போது முஸ்லிம்களுக்கு யாரும் பாதுகாப்பு அளிக்கவில்லை. ஏனைய பிரதேசங்களில் முஸ்லிமகளின் பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படலாம். நாளை மறுநாள் நோன்பு பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் பிரச்சினைகளை ஏற்படுத்த எனக்கு விருப்பம் இல்லை. அதனால் ராஜினாமா செய்தேன்”.
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பாசிகுடா பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு சென்று சவுதி அராபிய நாட்டைச் சேர்ந்த சிலரை சந்தித்த சி.சி.ரி.வி காணொளியொன்று அண்மையில் வெளியாகியிருந்தது.
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பின்னர் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து குறித்த காணணொளி வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஹிஸ்புல்லாஹ் குறித்த சந்திப்பானது உத்தியோகப்பூர்வமானது என்றும் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையது அல்ல என்றும் கூறினார்.
தன்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்த ஹிஸ்புல்லாஹ், தான் தவறிழைத்திருந்தால் எந்தவொரு தண்டனையையும் எதிர்கொள்ளத் தாயர் என்றும் குறப்பிட்டுள்ளார்.
–“சவுதி அரேபியாவில் இருந்து வருகைதந்த முதலீட்டாளர்களுடன் உத்தியோகப்பூர்வ சந்திப்பொன்றே நடைபெற்றது. என்னுடன் பொலிஸார் இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தனர். நாட்டின் தற்போதைய நிலையை தெரிவித்து பின்னர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் என்று கூறிவிட்டேன். பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ஹோட்டலுக்கு சென்று விசாரித்து விட்டனர். இதில் உண்மை எதுவும் இல்லை. எனக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பித்து ஒரு வாரத்துக்குள் நிறைவு செய்து நான் குற்றமற்றவர் என்பதை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். பயங்கரவாதத்துடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இந்த விடத்துடன் சவுதிக்கும் தொடர்பு இல்லை. நான் தவறிழைத்திருந்தால் எநத தண்னை என்றாலும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன். எனக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நானாகவே ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். எந்தவித தண்டனைக்கும் நான் தயாராகவே உள்ளேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |