Home » » மிரட்டிய தேரர்களுக்கு நடுவில், முஸ்லிம் மக்களின் ஹீரோவாக தன்னை நிரூபித்த ஹக்கீம்...

மிரட்டிய தேரர்களுக்கு நடுவில், முஸ்லிம் மக்களின் ஹீரோவாக தன்னை நிரூபித்த ஹக்கீம்...

மீண்டும் ஒருமுறை இலங்கை அரசியல் பரபரப்பை அடைந்திருக்கிறது. உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் நாட்டை கிலி கொள்ளச் செய்திருந்தாலும், அதன் தாக்கம் அடுத்தடுத்து அரசியலிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், ஆளுநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
முன்னதாக ரிசாத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு அவரின் அமைச்சுப் பதவி பறிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தான் நான்கு நாட்களுக்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையிலெடுத்தார்.
நான்காவது நாளான இன்று அவரின் உடல்நிலை மோசமடைந்தது. அதற்கிடையில், ஆளுநர்களான அசாத் சாலியும், ஹிஸ்புல்லாஹ்வும் தமது பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தனர். இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்த தேரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை, இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய முஸ்லிம் அமைச்சர் தாங்கள் அமைச்சுப் பொறுப்பை துறப்பதாகவும், ஆனால் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படவுள்ளதாகவும் அறிவித்தனர்.
ஊடகவியலாளர் மாநாட்டினை நடத்தி தங்களின் முடிவினை அறிவிப்பதற்கு முன்னர், அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களின் நிலைப்பாட்டை உறுதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துவிட்டுத்தான் நாட்டு மக்களுக்கு அவர்கள் உரையாற்றியிருக்கிறார்கள்.
உண்மையில், தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்தினால் கண்டி நகரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினையும், இனங்களுக்கிடையில் மோதல்களும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இம்முடிவினை முஸ்லிம் அமைச்சர்கள் எடுத்திருப்பது வரவேற்கத் தக்கது என்று பாராட்டுக்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.

அரசியல் நெருக்கடியான இச்சூழலை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுவ் ஹக்கிம் மிகச் சாதுர்யமாக கையாண்டுள்ளார் என தென்னிலங்கை தரப்பினர் பாராட்டிவருகின்றனர்.
இன்று தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்த அதேவேளை, அவருக்கான ஆதரவுகளும் பெருகிக் கொண்டிருந்தன. அதேவேளை, தேரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் குதிப்போம் என்றும் ஞானசார தேரர் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
அத்துரலிய ரதன தேரர், ஆளுநர்களையும், ரிசாத்தையுமே பதவி விலக வேண்டும் என்றும், அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி போராட்டத்தில் இறங்கினார். ஆனால், நாட்டின் அரசியல் நெருக்கடி நிலையினையும் முஸ்லிம் மக்களின் ஏக பிரதிநிதி என்ற வகையிலும், ஒருமித்தவகையில் இணைந்து தங்களின் பதவியை துறப்பதாக ரவுவ் ஹக்கீம் அறிவித்தது அவர் மீதான மதிப்பை மேலும் கூட்டியுள்ளதாக முஸ்லிம் சகோதரர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றார்கள்.

உண்மையில், நீண்ட அரசியல் அனுபவமும், நாட்டில் தமிழ் சிங்கள அரசியல் தலைமைகளோடு இணக்கப்பாட்டோடும், சிறந்த தலைமைத்துவத்தினை வழங்கிக் கொண்டிருக்கும் ஹக்கீம் இன்றைய அரசியல் நெருக்கடியை சரியான முறையில் அணுகியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் தரப்பினர்.
நாட்டில் வன்முறைகளோ அல்லது இனங்களுக்கிடையில் முறுகல் நிலையே ஏற்பட இடம்கொடாது, சிறப்பான முடிவினை எடுத்திருக்கிறார் என்கிறார்கள். அமைச்சர் மற்றும் ஆளுநர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நீதியான முறையில் விசாரிப்பது அரசாங்கத்தின் கடமை. எனினும் உடனடியாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை சாதுர்யமாகவும், நிதானமாகவும் கையாள வேண்டியது ஒரு தலைமைத்துவத்திற்கான பண்பும் கூட. அதனை ஹக்கீம் சரியான முறையில் செய்திருக்கிறார்.
இன்று ஊடக சந்திப்பின்போது பேசிய அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து பிரதமருடனும், அமைச்சர்களுடனும் கலந்துரையாடினோம். பிரதமருடன் பேசியதன் பின்னர் பதவிகளை கூட்டாக இராஜினாமா செய்யும் முடிவை அறிவித்தோம். பிரதமருடனான சந்திப்பின் பின்னர் எம்மால் சுயாதீனமாக எடுக்கப்படும் முடிவுக்கு ஆதரவளிக்கப்படும்.

அத்துடன், முஸ்லிம் அரசியல்வாதிகளை மையப்படுத்தி நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் இரத்த கலரியை உருவாக்கவும் சிலர் முயற்சிக்கின்றனர். எனவே, நாட்டின் நலன், அமைதி உட்பட மேலும் பல காரணங்களைக் கருத்திற்கொண்டே நாம் இந்த முடிவை எடுத்தோம். சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடாது என்பதிலும் உறுதியாக நிற்கின்றேன்.
அதேவேளை, முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இன்னும் நிறுத்தப்படவில்லை. சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களும் வதைக்கப்படுகின்றனர். இவை நிறுத்தப்படவேண்டும். அனைத்துவித நடவடிக்கைகளும் சட்டத்தின் பிரகாரம் இடம்பெறவேண்டும்.
ஒரு இனத்தினை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற வகையில் நாங்கள் எமது மக்களின் உரிமைக்காக போராடுவோம். அதேவேளை ஒருசிலர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை உரியமுறையில் விசாரணைக்கு உட்படுத்தவும் ஆதரவு கொடுப்போம் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் இருந்தும் இன்று அம்மக்களின் தலைவராகவும், அவர்களின் குரலாகவும் ஹக்கீம் பேசியிருக்கிறார் என்று பாராட்டுக்கு உள்ளாகிவருகிறார்.
இதேவேளை, அமைச்சர் ரிசாத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற அதேவேளை, ரிசாத் தனிநபர் அரசியல் செய்கிறார். தான் சார்ந்த சிலருக்காகப் பேசுகிறார் என்னும் குற்றச்சாட்டு முஸ்லிம் மக்களிடையே உண்டு.
இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் ஹக்கீமிடம் இல்லை என்று இன்றைய அவரின் முடிவுக்குப் பின்னர் பலர் சமூக வலைத்தளங்களில் பாராட்டியுள்ளார். தன்னை மீண்டும் ஒருமுறை முஸ்லிம் மக்களின் சரியான பிரதிநிதியாக அடையாளப்படுத்தியிருக்கிறார் ஹக்கீம் என்று புகழ்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |