ஏப்ரல் 21 தாக்குதல்களை நடத்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் போன்ற ஒன்றல்ல, விடுதலைப்புலிகள் நிலத்துக்காக போராடினார்கள். அவர்களுடன் நேருக்கு நேர் மோதிக்கொள்ள முடிந்தது என பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை பேணிய முஸ்லீம் அரசியல்வாதிகளை பாதுகாத்து வருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு க்களை மறுத்துள்ள பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை தகுதி தராதரம் பாராது தண்டிப்பதற்கான அனைத்து அதிகாரங்களும் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“ஊடகங்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. எனினும் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு நாம் ஊடகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம். பொய்யான தகவல்கள் சமூக ஊடகங்கள் ஊடாக பரவியதை அடுத்தே நாம் இந்தக் கோரிக்கையை விடுத்தோம். எனினும் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அந்தத் தீவிரவாதக் குழுவின் அங்கத்தவர்களில் 97 வீதமானவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்னும் ஒருசிலரே காணப்படுகின்றனர். அவர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்ற அடிப்படையில் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.
தீவிரவாதத்தை இந்த நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிப்பதற்கு முழுமையான அதிகாரத்தை படைத்தரப்புக்கும், அதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளோம். இதில் அரசியல்வாதிகளின் எவ்வித தலையீடும் இருக்காது. எங்களுக்கு எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அரசியல்வாதிகளை அல்ல நாட்டை பாதுகாக்கவே கடமைப்பட்டுள்ளோம். விசாரணைகளில் எவ்வித தேக்கமும் இல்லை. இந்த விசாரணைகளுக்கு புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்பு, குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றனர்.
ஏப்ரல் 21 தாக்குதல்களை நடத்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் போன்ற ஒன்றல்ல, அவர்கள் நிலத்துக்காக போராடினார்கள். அவர்களுடன் நேருக்கு நேர் மோதிக்கொள்ள முடிந்தது. இவர்கள் அவ்வாறு அல்ல, மிகத்தீவிரமான தாக்குதல்தாரிகள். உலகின் பல நாடுகளில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மதவாதத்தை முன்நிறுத்தி செயற்படுகின்றனர். சஹ்ரானைப் போன்று வேறு நபர்கள் இருக்கின்றார்களா எனத் தேடிப் பார்க்க வேண்டும். அது தொடர்பில் ஆராய வேண்டும். அவ்வாறான அமைப்புகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
0 comments: