Home » » கொழும்பிற்கான நுழைவாயில்களிலுள்ள பாலங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்க்கலாம்? பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

கொழும்பிற்கான நுழைவாயில்களிலுள்ள பாலங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்க்கலாம்? பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!



உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலை அடுத்து ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பிற்கான நுழைவாயில்களிலுள்ள பாலங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்க்கலாம் என்று அச்சம் காரணமாக பாதுகாப்பு பன்மடங்கால் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஸ்ரீலங்காவின் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி. விக்ரமரத்ன மே தினமான நேற்றைய தினம் இதுதொடர்பிலான எச்சரிக்கை கடிதமொன்றை அனைத்து பாதுகாப்புத் துறையினருக்கும் அனுப்பிவைத்துள்ள நிலையிலேயே கொழும்பிற்கு உட்பிரவேசிப்பதற்கான அனைத்து பாலங்களுக்குமான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
இது குறித்த கள நிலவரங்களுடன் எமது கொழும்பு செய்தியாளர் சிரியான் சுஜித் தெரிவித்ததாவது.,.
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் மேம்பாலங்கள் உட்பட முக்கிய பாலங்களை குண்டு வைத்து தகர்க்க தீவிரவாதிகள் தயாராகிவருவதாக புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருப்பதை அடுத்தே இந்த எச்சதரிக்கை கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் சி.பி. விக்ரமரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பிவைத்திருக்கின்றார்.
இந்தக் கடிதம் தொடர்பான தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து மக்கள் மத்தியில் குறிப்பாக தலைநகர் கொழும்பில் வாழும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. கடந்த 21ஆம் திகதியான உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட எதிர்பாராத தொடர் தற்கொலைத் தாக்குதலில் 250-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததோடு, 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த சம்பவமானது ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதோடு தற்கொலைத் தாக்குதல் குறித்த தகவல் ஏற்கனவே கிடைத்திருந்தும் அதனைத் தடுப்பதற்கான வழிகளை மேற்கொள்ளாமை குறித்து பொதுமக்களிடம் இருந்தும் அரசாங்கம் தொடர்பில் கடும் அதிருப்தி எழுந்திருக்கின்றது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் மேலும் பல திட்டங்கள் இருக்கலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுவருவதுடன், நாடு தழுவிய ரீதியில் பாதுகாப்புப் படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டு, சோதனைகளும் - சுற்றிவளைப்புக்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புவைத்திருக்கும் மற்றும் பயிற்சி பெற்றிருக்கும் 140க்கும் அதிகமானவர்கள் இன்னும் ஸ்ரீலங்காவிற்குள் இருப்பதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
அரச தலைவரின் இந்த அறிவிப்பு வெளியாகிய தினமன்று கல்முனை சம்மாந்துறையில் நடத்திய சோதனையின்போது ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பை வைத்திருந்த ஆறு பேர் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டனர். இதற்கு முன்னர் அரச படையினருடன் துப்பாக்கிச் சமரிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த வெடிப்புக்கள் மற்றும் துப்பாக்கிச் சமரில் ஆறு குழந்தைகளும், மேலும் மூன்று பெண்களும் பலியாகியிருந்த நிலையில் நேற்றைய தினம் அவர்களின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் சாய்ந்தமருது பகுதியிலுள்ள மறைவிடத்தில் இருந்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கொடி உட்ப்ட பெருமளவான ஆயுதங்களும் பணமும் மீட்கப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையிலேயே தற்போது ஸ்ரீலங்கா தலைநகரான கொழும்பிற்குள் பிரவேசிக்கின்ற அனைத்துப் பாலங்களையும் குண்டுகள் வைத்து தகர்ப்பதற்கான திட்டத்தை தீவிரவாதிகள் தீட்டியிருப்பது தொடர்பிலான புலனாய்வு தகவல் கிடைத்திருப்பதை பதில் பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறார்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் சகல பொலிஸாரையும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளது. இதற்கமைய கொழும்பு நகரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொழும்புக்கு உட்பிரவேசிக்கும் நுழைவாயில்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதேவேளை நேற்று முன்தினம் இரவு தென்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் நிரப்பட்ட 20 வாகனங்கள் வடக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் எச்சரித்துள்ளதாக தெரிவித்து நேற்றைய தினம் முதல் வடக்கிற்கான நுழைவாயிலான வவுனியாவில் நான்கு வீதிச் சொதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அவற்றின் ஊடாக செல்லும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு உயிர்த்த ஞர்யிறு கொடூரம் இடம்பெற்று 12 நாட்கள் கடந்தும் நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்தும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் அதேவேளை பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரித்து வருகின்றன என தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |