அமெரிக்க கடற்படையின் நாசகாரி போர்க் கப்பல் ஒன்றும், போக்குவரத்து கப்பல் ஒன்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க கப்பல்களை சிறிலங்கா கடற்படை அதிகாரிகளும், அமெரிக்க தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான லெப்.கொமாண்டர் பிறயன் பட்ஜ் ஆகியோர் வரவேற்றனர்.
சிறிலங்கா கடற்படையின் சயுரால மற்றும் சமுத்ர ஆகிய போர்க்கப்பல்களுடன் இணைந்து அமெரிக்க போர்க்கப்பல்கள், கரையோர மற்றும் ஆழ்கடல் பயிற்சிகள் என, இரண்டு கட்டங்களாக CARAT-2019 கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.
இந்தக் கூட்டுப் பயிற்சியின் அடிப்படை நோக்கம், கடல்சார் பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதாகும்.
USS Spruance என்ற நாசகாரி கப்பலும், USNS Millinocket என்ற போக்குவரத்துக் கப்பலும் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து, CARAT-2019 எனப்படும், “கப்பல் தயார்நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு” என்ற கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக சிறிலங்கா வந்துள்ளன.

இந்த பயிற்சியின் மூலம் சிறிய படகுகளை கையாளுதல், சுழியோடும் பயிற்சிகள், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, சமூக நலன்புரி செயற்பாடுகள், விளையாட்டு, போன்றவற்றின் மூலம், இருதரப்பு ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
103 மீற்றர் நீளம் கொண்ட USNS Millinocket என்ற, மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணிக்கக் கூடிய அதிவேக போக்குவரத்துக் கப்பல், 2362 தொன் எடையுள்ளது.
Arleigh Burke வகையைச் சேர்ந்த நாசகாரி போர்க்கப்பலான, USS Spruance ஆகப் பிந்திய தொழில்நுட்பங்களைக் கொண்ட அதி நவீன போர்க்கப்பலாகும். 160 மீற்றர் நீளமும் 9580 தொன் எடையும் கொண்ட இந்த நாசகாரியில் 260 அதிகாரிகள் மற்றும் படையினர் உள்ளனர்.



0 Comments