Home » » வடக்கைப்போன்று கிழக்கிலும் அபிவிருத்தி -மட்டக்களப்பில் ரணில்

வடக்கைப்போன்று கிழக்கிலும் அபிவிருத்தி -மட்டக்களப்பில் ரணில்

வடக்கு அபிவிருத்தி அமைச்சினூடாக அம்மாகாணத்தில் எவ்வாறு அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றதோ அதற்கு சமாந்தரமாக கிழக்கு மாகாணத்திலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை செயற்படுத்துவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
பத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய விழா மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கில் இன்று சனிக்கிழமை (23) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு வைபவ ரீதியாக காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கிவைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர்களான அலிஸாஹீர் மௌலானா, எம்.எஸ.எஸ்.அமீர்அலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் விசாலமான திட்டங்களில் ஒன்றான காணியற்றவர்களுக்கு காணி அனுமதிப்ப த்திரங்கள் வழங்கும் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் மக்களுக்கு ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொடுத்துள்ளோம் ஒக்டோபர் மாதம் அதனைப் பாதுகாத்தோம். தற்போது வடக்கு கிழக்கு என சகல மாகாணங்களிலும் காணி இல்லாதவர்களுக்கு காணிக்கான உரித்து வழங்கப்படும் இதனை வைத்து வியாபாரம் செய்வதற்கான சுயதொழில் முயற்சிக்கு இலகு கடனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சகல மாணவர்களின் கல்வி அறிவு விருத்திக்காக 13 வருடங்கள் கல்வியைக் கட்டாயப்படுத்தியுள்ளோம். இதற்காக பயிற்றப்பட்ட ஆசிரியர்களை வழங்கவுள்ளோம். பாடசாலைகளில உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு டப் கணனிகளை வழங்கவுள்ளோம்.
டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறையை கொண்டுவரபோகிறோம். இதன் மூலம் பொருளாதாரம் டிஜிட்டலாக்கப்படும். இதன் மூலம் நிதிகளைப் பரிமாற்றம் செய்கின்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். கணனி உரிமைப் பத்திரங்களையும் முழுமையாக கணனி மயப்படுத்தவுள்ளோம். கணனி மயப்படுத்தலை கிராம ரீதியாக அமுல்படுத்தும் செயற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டுள்ளளோம்.
இந்த நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மக்களுக்கு உரிமையைக் கொண்டுவந்துள்ளது இதனைப் பாதுகாத்து முன்னெடுத்து கொண்டு செல்ல வேண்டும்.
வெளிநாட்டு தூதுவர்கள் வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் செல்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கூறியிருந்தார் அவர்களை விட அபிவிருத்தி செய்வதற்காக நான் கிழக்கு மாகாணத்துக்கு வந்திருக்கிறேன்.
யுத்தம் காரணமாக கூடுதலான அழிவுகளை வடக்கு மாகாணம் எதிர்நோக்கியுள்ளது. வடக்கு அபிவிருத்தி அமைச்சு கிடைத்ததும் அங்கு சென்று வடக்கின் அபிவிருத்திக்கான திட்டங்களை வடிவமைப்பதற்காக சில நாட்கள் வடக்கில் தங்கியிருந்தேன்.
கிழக்கு மாகாணத்துக்கு அடிக்கடி நான் வந்திருக்கிறேன் கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக கூட்டங்களை நடத்தி அதனை செற்படுத்துவேன் என உறுதியளிக்கிறேன். சிங்கள தமிழ் - சிங்கள முஸ்லிம் மக்கள் சமாதானத்தோடு வாழ்ந்த காலம் இதனை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |