Home » » உலக நாடுகளை ஆச்சரியத்தில் உறையவைத்த மிகச் சிறிய குழந்தை!

உலக நாடுகளை ஆச்சரியத்தில் உறையவைத்த மிகச் சிறிய குழந்தை!

உலகின் மிகச்சிறிய ஆண் குழந்தையொன்று ஜப்பானில் பிறந்து உயிர் பிழைத்துள்ளதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சுமார் கால் கிலோ அளவு (268 கிராம்) எடையுடன் பிறந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளது.
இந்த குழந்தை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 24 வார கருவாக இருந்தபோது மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அறுவைச்சிகிச்சை மூலம் பிறந்துள்ளது. பிறக்கும்போது கைக்குள் அடங்கிவிடும் அளவில் இருந்துள்ளது. தொடர்ந்து பல மாதங்களாக அவசர சிகிச்சைப் பிரிவிலேயே பராமரிக்கப்பட்டு வந்ததுடன் தற்போது சாதாரணமாக பராமரிக்கக்கூடிய அளவுக்கு தேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 3.2 கிலோ எடையுடன் உள்ள அந்த குழந்தைக்கு உணவும் ஊட்டப்படுவதாகவும் தனதுமகன் பிழைப்பான் என தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்றும் ஆனால் தற்போது இவ்வளவு பெரிதாக வளர்ந்திருப்பதனால் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அந்தக் குழந்தையின் தாய் கூறியதாக டோக்கியோவின் கெய்ரோ பல்கலைகழக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, உலகின் மிகச்சிறிய குழந்தை, சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக உயிர்பிழைத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது என்று இந்த குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர் டகேஷி அரிமிட்சு தெரிவித்திருக்கிறார். ஜப்பானின் லோவா பல்கலைகழகத்திடம் இருக்கும் உலகின் மிகச்சிறிய குழந்தைகள் குறித்த தரவுகளின்படி இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அளவில் மிகச்சிறியதாக பிறக்கும் குழந்தைகளும் நல்ல தேகாரோக்கியத்துடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறமுடியும் என்றும் அதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் கடந்த 2015ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த பெண் குழந்தையொன்று 252 கிராம் அளவில் பிறந்து உயிர் பிழைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதில் விசேட அம்சம் என்னவெனில் அளவில் சிறியதாய்ப் பிறக்கும் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் உயிர் பிழைப்பது அரிதிலும் அரிதான விடயமாக காணப்படுகிறது. இந்த நிலையிலேயே தற்பொழுது உலகில் முதன்முறையாக மிகச் சிறிய எடையில் பிறந்து உயிர் பிழைத்த ஆண் குழந்தையாக இது விளங்குகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |