Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ATM இயந்திரங்களில் போலி அட்டைகள் மூலம் பணமோசடி

மத்திய வங்கி விசாரணை ஆரம்பம்

ஏ.டி.எம்.(ATM) இயந்திரங்கள் மூலம் மோசடி முறையில் பணம் எடுக்கப்படுவதாக மத்திய வங்கிக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக உடனடியாக விசாரணை செய்ய மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நேற்று உறுதி செய்தார்.

இந்த விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கை நாளை (05) வெளியாகுமென்றும் அவர் மேலும் கூறினார்.

கடந்த சனிக்கிழமை முதல் ஏ. டி. எம். (ATM) இயந்திரங்கள் மூலம் மோசடி முறையில் பணம் எடுக்கப்படுவதாக பல்வேறு தனியார் மற்றும் அரச வங்கிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மூலம் ஈ.எம்.வி சிப் (EMV Chip) தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத வங்கிகளிலிருந்து மட்டுமே இவ்வாறான மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது என்றும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் கூறினார்.

மேலதிக பாதுகாப்பின் நிமித்தம் ஈ.எம்.வி சிப் (EMV Chip) தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் கூறப்பட்டுள்ள போதிலும், 2016இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பத்தைபயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல என்பதால் சில வங்கிகள் இந்த தொழில்நுட்பத்தை இதுவரை பயன்படுத்தாமல் உள்ளன. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை கருத்திற்கொண்டு அவ்வாறான தொழில்நுட்பம் கட்டாயமாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட்டால் அதனை கடைப்பிடிக்காத வங்கிகள் குறிப்பிட்ட நட்டம் ஏற்படும் நிதியை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.

மேற்கூறிய மோசடி மூலம் ஏ. டி. எம். (ATM) இயந்திரங்களில் கடந்த சனிக்கிழமை (02) முதல் இவ்வாறு பணம் எடுக்கப்படுவதாகவும் ஒரு சில இடங்களில் 60,000ரூபா முதல் 80,000ரூபா வரை இவ்வாறு மோசடியாக எடுக்கப்பட்டதாகவும் இதனால் பல வங்கிகளில் ஏ. டி. எம். (ATM) இயந்திரங்கள் மூலம் எடுக்கக்கூடிய தொகை கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.

போலி கடன் அட்டைகள் மூலமே இவ்வாறு ஏ. டி. எம். .(ATM) இயந்திரங்களிலிருந்து பணம் மோசடியாக எடுக்கப்படுவதாக ஒருங்கிணைந்த தொலைத் தொடர்பு ஆய்வு மற்றும் ஆலோசனை கேந்திரத்தின் தொகுதி நிறைவேற்று பணிப்பாளர் வாசனா விக்கிரமசிங்க கூறினார்.

கடன் அட்டைகளின் தகவல்களை திருடி மோசடி கும்பல் போலி கடன் அட்டைகளை தயாரித்து அதன் மூலம் பணத்தை திருடுவதாகவும், இதனைத் தடுப்பதற்கான தொழில்நுட்பம் இன்னும் இலங்கைக்கு வரவில்லையென்றும் அவர் மேலும் கூறினார்.

Post a Comment

0 Comments