Home » » தற்கொலையாளிகளின் களமாகிவரும் கல்லடிப் பாலம் !!!!!!!

தற்கொலையாளிகளின் களமாகிவரும் கல்லடிப் பாலம் !!!!!!!


மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு மாநகரின் ஒரு வரலாற்று சின்னம் இந்த கல்லடி பாலம். இந்த பாலத்தின் கீழ் ஓடும் ஆற்றில் இரவு நேரங்களில் பார்த்தால் எத்தனை அழகான வண்ணங்கள். கோடி அழகு இங்கு கொட்டி கிடக்கின்றது. இரவு நேரங்களில் பாடும் மீன்களின் பாட்டு சத்தம் தேனாய் காதில் பாயும் என்று இங்கு எல்லோரும் சொல்ல கேட்டிருக்கிறேன்.

ஆனால் இன்று சில நாட்களாக பல உயிர்களின் மரண ஓலம் தான் கேட்கிறது.

வேறு பிரதேசங்களில் இருக்கும் மக்களிடையே இந்த கல்லடி பாலம் குறித்து ஒரு கருத்து இன்றும் இருந்து வருகின்றது அது கல்லடி பாலத்தில் பேய்கள் நடமாட்டம் இருக்கிறது அந்த பாலத்திற்கு ஒரு பயங்கரமான வரலாறு இருக்கிறது என்பதாகும். நான் மட்டக்களப்பை பற்றி கேள்விப்பட்ட போதும் கல்லடி பாலத்தில் பேய் இருக்கிறதாம் என்று எங்கள் ஊரில் சிலர் கூறினார்கள்.  அதன் பின்பு இங்கு நான் வந்த போது அடடா எத்தனை அழகான இடம் இது, இதை போய் ஏன் இப்படி கூறுகிறார்கள், நம் ஊர் மக்கள் கதை கட்டுவதில் வல்லவர்கள் என்றெல்லாம் நான் நினைத்ததுண்டு.

ஆனால் இன்று நான் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எத்தனை முட்டாள் மனிதர்களின் உயிர்கள் இந்த பாலத்திற்கு கீழ் ஓடும் ஆற்றில் கரைந்து போயுள்ளது.


இந்த கல்லடி பாலத்தின் வரலாற்றை நான் படித்த போது,

இந்த பாலம் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது 1924 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.  பிரித்தானிய பிரிட்டிஷ் கவர்னரான வில்லியம் மானிங் அவர்களின்  மனைவியின் நினைவாக இந்த பாலம் லேடி மன்னிங் பாலம் என்று பெயரிடப்பட்டது. இது இலங்கையின் பழமையான மற்றும் மிக நீண்ட இரும்பு பாலம் ஆகும். தினமும் சராசரியாக 10,000 வாகனங்கள் இந்த குறுகிய ஒற்றைப் பாலத்தில் சென்றதாக கூறப்படுகின்றது.

2006 ஆம் ஆண்டில் பழைய பாலத்துடன் ஒரு புதிய பாலத்தை இணைக்க திட்டமிடப்பட்டது. புதிய பாலத்தின் கட்டுமானம் மார்ச் 2008 இல் தொடங்கியது.   புதிய பாலம் கட்டுன பணிகள் முடிந்து முறையாக 22 மார்ச் 2013 அன்று திறக்கப்பட்டது.

புதிய இரண்டு பாதை பாலம் 288.35 மீ (946 அடி) நீளம் மற்றும் 14 மீ (46 அடி) அகலம். புதிய பாலம்  ரூ. 2.6 பில்லியன் செலவில் கட்டப்பட்டது.  அமெரிக்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் இருந்து ஊக்கமளிக்கும் ஊக்கமளிக்கப்பட்ட கிழக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டது இந்த பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு.



இப்படி ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த பாலத்தை இன்று பலர் தற்கொலை பாலம் என வர்ணிக்கிறார்கள்.

இந்த ஆற்றில் மீன்பிடி தொழில் நடைபெறுகின்றது. அதே நேரம் அங்கு உள்ள மீன்களுக்கு தங்கள் உடலை உணவாக கொடுக்கும் வேலையும் நடைபெற தான் செய்கிறது.

இந்த தற்கொலைகள் மட்டக்களப்பு நகரின் சாபக்கேடு என்று தான் சொல்ல வேண்டும். பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க தெரியாத கோழைகளின்  வாழ தகுதியற்ற உயிர்களை காவு வாங்கி கொண்டு அமைதியாக ஒடுகிறது பாலத்தின் கீழ் இருக்கும் ஆறு. மனிதர்கள் மற்றும் வாகனங்களோடு சேர்த்து வேலை, குடும்பம், கடன், காதல் என்று பல சோக கதைகளையும் சேர்த்து சுமக்கிறது இந்த கல்லடி பாலம்.



இந்த தற்கொலைகளை யார் பொறுப்பேற்க முடியும் மட்டக்களப்பு மேயரா? கவர்னரா? நகர சபையா? மாநகர சபையா? அல்லது இந்த பாலத்தை கட்டிய பிரிட்டிஷ் கவர்னர் வில்லியம் மானிங் அவர்களின் ஆவியா?யார் என்று சொல்வது, இந்த பாலத்தில் இருந்து விழுந்து உயிரை விடும் முட்டாள்கள் தான் பொறுப்பு இதற்கு.

பிரச்சினைகளுக்கு தீர்வு தற்கொலை அல்ல. நாம் என்ன செய்கிறோம் என்றால் தற்கொலை செய்து கொண்டவருக்காக பரிதாபப்படுகிறோம் அவர்களின் மரண அறிவித்தல்களை சோகத்துடன் தெரிவிக்கிறோம் இது இன்னொரு தற்கொலைக்கு ஒரு தூண்டுதலாகும்.



இது போன்ற முட்டாள்களின் செயல்களுக்கு அனுதாபப்படாதீர்கள்.  அது இந்த தற்கொலைகளை நாம் வரவேற்பதற்கு சமம்.  இரண்டு கால்களையும் இழந்த ஒருவன் ஒரே இடத்தில் உட்கார்ந்து செருப்பு தைத்து பிழைக்கிறான் ஆனால் காலில் பெரிய காயம்பட்டவன் தன்னால் நடக்க முடியவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறான்.  இது தான் நம் மனித இனத்தின் கசப்பான உண்மை நிலை.

உயிரின் பெறுமதி என்னவென்று தெரியாத மதிகெட்ட மானுட ஜென்மங்கள் தான் இங்கு தற்கொலை செய்கிறார்கள்.



எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் அறிவு ஜீவிகளே கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உங்கள் முட்டாள்தனமான செய்கை உங்கள் உறவுகளுக்கு எத்தனை வலியை கொடுக்கிறது என்று ஒரு நொடியில் உயிரை மாய்த்துக் கொண்டு நீங்கள் போய் விட்டால் எந்த பிரச்சினையை பார்த்து ஓடினீர்களோ அது உங்களுக்கு பிறகு உங்கள் அன்பானவர்களை தான் தொடரும்.

நீங்கள் தற்கொலை செய்து கொள்வதால் இந்த உலகம் உங்களை போற்றி பூஜிக்க போவதில்லை மாறாக உங்கள் நடத்தையை தான் அவதூறாக பேசும்.



பிரச்சினைகளுக்கு தீர்வு தற்கொலை அல்ல.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டி வளருங்கள். எந்த பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு முகம் கொடுக்க கற்றுக் கொடுங்கள். இளம் வயதில் இருக்கும் உங்கள் பிள்ளைகளின் பிரச்சினைகளை பற்றி அவர்களுடன் மனம் விட்டு வெளிப்படையாக பேசுங்கள்.

ஏனெனில் கல்லடி பாலத்தில் இடம்பெறும் தற்கொலைகளில் அதிகமானவை இளம் வயதினர்களுடையதே. காரணம் காதல் பிரச்சினைகள்.  உங்கள் பிள்ளை யாரை காதலிக்கிறார், எங்கு போய் வருகிறார், என்ன பிரச்சினை என்பதையெல்லாம் அவதானியுங்கள். அவர்களின் செயல்களில் மாற்றம் தெரிந்தால் தனிமையில் அழைத்து பேசுங்கள். தயங்கி நிற்கவோ யோசிக்கவோ எதுவுமில்லை. இதை பற்றி பேசுவது அவ்வளவு நாகரீகமாக இருக்காது என்று நீங்கள் ஒதுக்கி வைக்க எதுவுமில்லை.



இந்த கல்லடி பாலம் என்பது மட்டக்களப்பு நகரின் அடையாளம் மாறாக இது தற்கொலை செய்வதற்கான இடம் அல்ல. பாலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தாலும் கூட அது தவறி விழுபவர்களை காப்பாற்றலாம் ஆனால் வேண்டுமென்றே வந்து விழுபவர்களை என்ன செய்ய முடியும். நம்முடைய ஊரின் பெயர் சொல்லும் வரலாற்று சிறப்பு வாய்ந்த அடையாளங்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும். உங்களுடைய முட்டாள்  தனத்திற்கு விலை மதிப்பற்ற உயிரையும் உங்கள் ஊரின் பெருமையையும் பலி கொடுக்காதீர்கள். சமூக ஆர்வலர்களும் சமூக விழிப்புணர்வாளர்களும் மட்டக்களப்பில் பல விடயங்களுக்காக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்துகின்றீர்கள். அதே போல் இந்த கல்லடி பாலத்தில் காவு கொள்ளப்படும் உயிர்களை தடுத்து நிறுத்தவும் மக்களிடையே தற்கொலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது நன்மை பயக்கும். இந்த மரண ஓலங்கள் நம் சந்ததியோடே முடிந்து போகட்டுமே நம் வருங்கால சந்ததியினரின் காதுகளுக்கு மீன்கள் பாடும் தேன் இசை மட்டும் கேட்கட்டும்.



-சகி-
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |