கணபதிபூசைக்கு கைமேல் பலன் என ஒரு பழமொழிசொல்வார்கள். அது போல சில அரசியல்பூசைகளுக்குரிய பலாபலன்கள் உடனடியாகவே கிட்டிக்கொள்வது உள்ளுர் மற்றும்உலக அரசியல் அரங்குகளில் உண்டு.
அதுபோல அரசியல்லாபநட்டக்கணக்குகளில் அடிபட்டுக்கொள்வதும் உள்ளுர் உலக களங்களுக்கும் பொருந்தும் பின்னணியில் இன்று சிறிலங்கா நாடாளுமன்றம் ஒப்பீட்டுரீதியில் அமைதியாக கூடி காரசாரமாக பேசிக்கலைந்தது.
மறுபுறத்தே ரணிலின் புதிய அரசாங்கத்துக்கான இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சு பதவிகள் இன்று வழங்கப்பட்டன. நேற்றைய அமைச்சரவை தகுதி அமைச்சர்களில் வடக்குகிழக்கைச்சேர்ந்த ஒருவருக்கும் இடம்வழங்கப்படவில்லை. எனினும் இன்றைய இராஜாங்க மற்றும் பிரதிப்பட்டியலில் மட்டும் ஒரேயொருவராக விஜயகலாமகேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சராக இடம்பிடித்தார்.
இந்தநகர்வைவிட இன்றைய நாடாளுமன்ற அமர்வில்தான் சிலவிடயதானங்கள் கிட்டின. குறிப்பாக நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் சமர்ப்பிக்கபட்ட இடைக்கால கணக்கு அறிக்கை ஒப்பேற்றப்பட்டது.
சிறிலங்காவின் அந்த 51 நாள் குழப்பத்தில் வரவுசெலவுத்திட்டம் சிக்கிவிட்டதால் வேறுவழியின்றி மைத்திரியின் கறுப்பு இரவு சூழ்ச்சியை வசைபாடியபடியேஇடைக்கால கணக்கு அறிக்கையை முன்னகர்த்தினார். அத்துடன் முழுமையான பாதீட்டுகணக்கு அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படுமெனவும் மங்கள செய்திசொன்னார்.
இடைக்கால கணக்கு அறிக்கையானது முழுமையான வரவுசெலவுத்திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு செலவினங்களுக்கு நிதியொதுக்கப்படும் வரை அரசாங்கத்தை நடத்த தேவையான நிதிக்கு ஒட்சிசன் வழங்கும் ஒரு அவசர நகர்வாகும்.
நாட்டின் நன்மையை கருத்தில்கொண்டு மங்களவின் இந்த நகர்வுக்குத்;தாம் ஆதரவளிப்பதாக மஹிந்ததரப்பு தெரிவித்தாலும் வாக்கெடுப்பின் போது அவர்கள் சபையில் பிரசன்னமாயிருக்காதநிலையில்1,765 பில்லியன் ரூபாய்க்கான, இந்த இடைக்கால கணக்கறிக்கை 102 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
எதிராக 6 வாக்குகள் கிடைத்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது. இவ்வாறாக மங்கள கணக்குவழக்குப்பார்க்க மக்களின் மனங்களில் தனது அரசாங்கத்தை கணக்கு வைப்பதற்காக உடனடியாகவே எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக ரணில் அறிக்கையிட்டார்.
இந்த நகர்வுகளுக்கு முன்னர் மகிந்த மற்றும் சரத்பொன்சேகா ஆகியோர் தத்தமது தரப்புக்களில் இருந்து சில அறிக்கையிடல்களை செய்தனர். அமைச்சரவையில் தன்னை இணைக்காமல் மைத்திரி காய்வெட்டி விட்டதில் வெகுண்ட பீல்ட்மார்சல் சரத்பொன்சேகா மைத்திரி சிறப்புரிமைகளை மீறுவதாக விசனப்பட்டார்.
அத்துடன் மைத்திரியை கொலை செய்வதற்கான சூழ்ச்சியில் தன்னுடைய பெயர் இல்லையெனவும் இதனை சிறிலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை புலப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
சரத்பொன்சேகா விடயத்தில் கொழும்புப்பட்சிகள் கூறும் புதிய செய்திகளின்படி அவருக்கும் மைத்திரிக்கும் இடையிலான லடாயை தீர்க்கும் பேச்சுகள் இடம்பெற்றிருப்பதால் விரைவில் அவருக்கும் அமைச்சுப்பதவி கிட்டுமென கிசுகிசுக்கபடுகிற்து.
இதற்கிடையே தன்மீதான கொலைச்சதிகுறித்த விசாரணைகள் முடியும்வரை சட்டம்ஒழுங்குத்துறை அமைச்சை தனது பொறுப்பில் வைத்திருக்க முடிவுசெய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இவ்வாறாக சில கதைகள்வர இன்று மகிந்தவும் நல்லபிள்ளைத்தனமாக ஒரு செய்தியை சொன்னார். சூழ்ச்சியால் தாங்கள் ஆட்சியை கைப்பற்றியதாக தன் மீது குற்றம் சுமத்தினாலும் தான் அவ்வாறெல்லாம் சூழ்ச்சி செய்யவில்லை எனத்தெரிவித்த மஹிந்த
எந்நேரமும்நாட்டை ஆட்சிசெய்யலாம் என நினைக்கவேண்டாம். மக்கள்புரட்சியின் ஊடாக, தாம்எந்தநேரத்திலும் ஆட்சியை கைப்பற்றலாம் என யானைகள் மேற்பார்த்த ஐக்கியதேசியமுன்னணிக்கு செய்திசொன்னார்.
சரி இன்று சிறிஜயவர்த்தனபுர நாடாளுமன்ற அரங்கில் இவ்வாறாக சில செய்திகள் சொல்லபட்டாலும் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்பாணியில் மக்களுக்கு ஒருவிடயத்தில் தெளிவான செய்தி இன்றும் சொல்லப்படவில்லை.
சிறிலங்காவின் சட்டபூர்வ எதிர்க்கட்சித்தலைவர் யார்? இந்த வினாவுக்கு இன்றும் சபாநாயகர் கரு ஜயசூரியாவால் உறுதியாக முடிவை சொல்ல முடியவில்லை.
அதற்குமாறாக மஹிந்தவை எதிர்க்கட்சித் தகுதிநிலையில் இருந்து இடைநிறுத்திவைக்கும்படி தன்னைநோக்கி எறியப்பட்ட அஸ்திரத்த்தை மையப்படுத்திய தனது இறுதிமுடிவு தாமதமாகுமென கூறி இன்றும் நழுவினார் கருஜயசுரிய.
ஏற்கனவே இந்தவிடயம் தொடர்பாக ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கவேண்டுமெனக் கோரி, கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனால் ஒரு பிரேரணை கையளிக்கப்பட்டது.ஆனால் இந்த விடயத்தில்தான் தனது தீர்மானம், தாமதமாகும் என சபாநாயகர் இன்று பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.
சிறிலங்காவின் சட்டபூர்வஎதிர்க்கட்சித்தலைவர் மகிந்தவா? இரா. சம்பந்தனா? என்ற வினாக்களில் மட்டுமல்ல மகிந்தநாடாளுமன்ற உறுப்பினராக கூட இருக்கமுடியுமா என்ற வினாவில் சபாநாயகரால் ஏன் ஒரு உறுதியான முடிவை சொல்லமுடியவில்லை.
அதற்குக்காரணம் உண்டு. கடந்த நவம்பர் 11ஆம் திகதி, தனது புதல்வன் நாமல் உள்ளிட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மகிந்த சொந்தச்செலவில் வைத்த சூனியமே இதற்குக் காரணமாகும்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் தாம் கட்சிதாவினாலும் பறிப்பதற்கு பதவி இல்லையே என்ற தினாவெட்டில் மஹிந்தவும் அவரது சகாக்களும் பொதுஜன பெரமுனவுக்கு தாவிச் சென்றனர். ஆனால் நடாளுமன்ற கலைப்பு நீர்த்துப்போய் மீண்டும் அரசாங்கம் சிலிர்த்த நிலையில் இந்த நகர்வு இப்போது திருப்பியடிக்கிறது.
மஹிந்த சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினரே என அதன் பொதுச்செயலாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் மகிந்த இருப்பதாக அதன் பொதுச்செயலாளரும் அறிவித்தாலும் இதில் சட்டச்சிக்கல்கள் இருக்கின்றன.
இதனால்தான் சிறிலங்காவின் சட்டபூர்வ எதிர்க்கட்சித்தலைவர் மகிந்தவா? என்ற விடயத்தில் இப்போது சபாநாயகரும் மகிந்தவும் பதற்றப்படுவதாக தெரிகின்றது.
0 Comments