நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் 10ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து நான்கு தினங்களாக இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், ஜனாதிபதியின் வர்த்தானி அறிவித்தல் மீதான இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததோடு அப்பதவியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான தேசிய அரசாங்க ஒப்பந்தத்தையும் முடிவுக்கு கொண்டுவந்தார்.
அதேபோல நவம்பர் மாதம் 9ஆம் திகதி 2096ன் கீழ் 70ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அறிவிப்பையும் விடுத்தார்.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யும்படி ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் மனுக்களைத் தாக்கல் செய்தன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி இடம்பெற்றபோது, குறித்த வர்த்தமானி அறிவிப்பு மீது உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை டிசம்பர் 4ஆம் திகதிவரை பிறப்பித்தது.
இதற்கமைய டிசம்பர் 4ஆம் திகதி குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 7 பேரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக இன்றுவரை விசாரணைகள் இடம்பெற்றன.
பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 7 பேரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்பாக இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதனடிப்படையில் இன்றைய தினமும் பிரதிவாதிகள் தரப்பிலான வாதங்களுக்கும் நீதிமன்றம் சந்தர்ப்பம் வழங்கியிருந்தது.
இதேவேளை உச்சநீதிமன்ற வளாகத்தில் திரளான பொலிஸார் மற்றும் ஆயுதம் ஏந்திய விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு கடமையில் குவிக்கப்பட்டிருந்தனர் எனவும் தெரிவித்தார்.
0 comments: