Advertisement

Responsive Advertisement

வடக்கு கிழக்கில் மீண்டும் மக்கள் பாரிய நெருக்கடிக்கும் மரண பயத்திற்கும் உள்ளாகியுள்ளனர்-கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம்


ஜனநாயகச் சூழலையும் அமைதியையும் ஏற்படுத்தி, மக்களின் இயல்பு வாழ்வுக்காகவும் மானிடநேய மாண்புக்காகவும் செயற்படுமாறு, நீதிக்காகச் செயற்படும் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக, திருச்சபை உள்ளிட்ட மூன்று அமைப்புகளும் கோரியுள்ளன.
நாட்டில் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய ஜனநாயக மீறல் இடம்பெற்று, நீதிக்கும் உண்மைக்கும், மானிட நேயத்துக்கும் எதிரான அவலமான சூழல் வலிந்து ஏற்படுத்தப்பட்டு, சட்டம், ஒழுங்கு, அரசியல் சாசனம் என்பவை முடக்கப்பட்டு, துன்பமிக்க வன்முறைச் சூழலொன்று, நாட்டின் பொறுப்பு மிக்கவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டமையானது, மிகவும் வேதனைக்கும் ஏமாற்றத்துக்குமுரிய விடயமென, இலங்கை மெதடிஸ்த திருச்சபை, வடக்கு, கிழக்கு திருமாவட்ட அவை, நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக்குழு ஆகியவை இணைத்து, விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் பொது மக்கள் பாரிய நெருக்கடிக்கும் மரண பயத்திற்கும் உள்ளாகி, அடுத்த நொடிப்பொழுதில் என்ன நடக்குமெனச் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர் என்றும் இவ்வாறான சூழலை அகற்றி, நாட்டில் அமைதியையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டியது, நீதியையும் சமாதானத்தையும் விரும்புகின்ற அனைவரதும் தலையாய கடமையாகும் என்றும், இந்தச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறும், அவ்வறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில், கொடிய அழிவுகளையும் பாரிய இழப்புகளையும் சந்தித்து, அவை தொடர்பான எவ்விதத் தீர்வும் கிடைக்காத நிலையில், தம்முடைய அடிப்படை நியாயங்களுக்காக ஏங்கி நிற்கும் மக்கள், மிகப்பெரிய எதிர்பார்ப்புடனேயே தற்போதய ஜனாதிபதிக்கு வாக்களித்த நிலையில், எவருடைய சர்வாதிகார ஆட்சியை முறியடித்து, இந்நாட்டைப் பேரழிவில் இருந்து மீட்டேனெனச் சூழுரைத்த ஜனாதிபதியே, இந்நாட்டின் அரசமைப்பையும் மீறி, ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி, நாட்டின் இரண்டாம் நிலைப் பதவிக்கான புதிய நியமனத்தை வழங்கியுள்ளாரெனவும், அவ்வறிக்கையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.(15)

Post a Comment

0 Comments