சிறிலங்காவின் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு இணங்காவிட்டால் விசேட சூழ்நிலை என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜெயசூரிய எடுப்பார் என தகவல்கள் வெளியாகிவருகின்றன.
125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டும் என விடுத்துள்ள கோரிக்கையை தான் செவிமடுத்தே ஆகவேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இது குறித்த பேச்சுவார்த்தைகள் இன்றைய தினம் மாலை ஐந்து மணிக்கு ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள சந்திப்பில் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமை அரசியலமைப்பிற்கு முரணான விடயம் எனவும் ஜனாதிபதி உடனடியாக சபா நாயகரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி நாடாளுமன்றை மீளக் கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தரப்புக்கள் கூறிவரும் நிலையில் இன்றைய சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இன்றைய சந்திப்பில் ஜனாதிபதி நாடாளுமன்றைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் விசேட சூழ்நிலை என்ற அடிப்படையில் நாடாளுமன்றைக் கூட்டும் அதிகாரம் சபா நாயகருக்கு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
0 Comments