Home » » ஒரு நாளைக்கு ஒரு வாய்ப்புற்று நோயாளி இனங்காணப்படுகின்றார்கள் -சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரமேஸ்

ஒரு நாளைக்கு ஒரு வாய்ப்புற்று நோயாளி இனங்காணப்படுகின்றார்கள் -சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரமேஸ்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு நாளைக்கு ஒருவர் வாய்புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது இனங்காணப்பட்டுவருவதாக மண்முனைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.ரமேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம்,மண்முனைப்பற்று சுகாதார திணைக்களம்,பல் வைத்தியர் சங்கம் என்பன இணைந்து நடாத்திய வைத்திய முகாம் இன்று காலை மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.ரமேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைத்திய முகாமில் பல் வைத்திய நிபுணர் டாக்டர் அனுஸ்க மற்றும் எட்டு பல் மருத்துவர்கள்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,பல் சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கியதாக இந்த பல் சிகிச்சை வைத்தியமுகாம் புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.

இதன்போது பல் சுத்தப்படுத்தல்,பல் அடைத்தல் மற்றும் ஏனைய பல் பிரச்சினைகள் தொடர்பிலும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

முக்கியமாக வாய்ப்புற்று நோயின் தாக்கம் தொடர்பில் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் அது தொடர்பான பரிசோதனைகளும் நடாத்தப்பட்டன.

புகையிலை பாவனை மற்றும் மதுவருந்துதல் உட்பட பல்வேறு காரணிகளினால் ஏற்படும் வாய்ப்புற்றுநோய் தொடர்பில் தெளிவூட்டல்கள் நடாத்தப்பட்டதாக மண்முனைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.ரமேஸ் தெரிவித்தார்.

பல் வைத்திய நிபுணர்களின் கருத்துப்படி தினமும் ஓருவர் வாய்ப்பு நோயாளியாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் வாய்ப்புற்றினால் பாதிக்கப்படும் ஒருவருக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கு ஒன்பது மணித்தியாளங்கள் தேவைப்படுவதுடன் சுமார் ஐந்து இலட்சம் ரூபா செலவு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய இந்த சத்திர சிகிச்சை முகாமில் சுமார் 250க்கும்மேற்பட்டவர்கள் பங்குகொண்டு பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.








Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |