Home » » ஜெனிவாவில் மற்றொரு தீர்மானத்தை தவிர்க்கும் முயற்சியில் இலங்கை!

ஜெனிவாவில் மற்றொரு தீர்மானத்தை தவிர்க்கும் முயற்சியில் இலங்கை!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை குறித்து மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படுவதைத் தவிர்ப்பதையும், ஏற்கனவே இணை அனுசரணை வழங்கியுள்ள தீர்மானத்திலிருந்து வெளியேறுவதையும் இலக்காகக் கொண்ட இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
செப்­டெம்பர் 10ஆம்­ தி­கதி முதல் 28ஆம்­ தி­கதி வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமைப் பேர­வையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து இரண்டு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்பில் சர்­வ­தேச அமைப்­புகள் கேள்­வி­களை எழுப்­ப­வுள்­ளன. இதனைவிட உப குழுக்கூட்டங்கள் சிலவும் இடம்பெறவிருக்கின்றது.
கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட இரண்டு விசேட ஐ.நா. நிபு­ணர்­களின் அறிக்­கை­களே இலங்கை தொடர்பில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளன. இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பான விசேட நிபு­ணரின் அறிக்கை முதலில் வெளியிடப்படும். இது குறித்த விவாதம் எதிர்­வரும் 12ஆம் திகதி நடை­பெறும்.
அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட உண்மை, நீதி, இழப்­பீடு மற்றும் மீள் நிக­ழாமை தொடர்­பான ஐக்­கி­ய­ நா­டு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப்பின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் ஜெனிவாவில் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவை இரண்டையும் எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராகிவருகின்றது.
அதேவேளையில், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்த 25 விடயங்களில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாகக் காட்டிக்கொள்வதன் மூலம், தமக்கு எதிராக மற்றொரு பிரேரணை கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கான இராஜதந்திர நகர்வுகளையும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக, பொறுப்புக் கூறல் விடயத்தைத் தவிர ஏனைய விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டிருப்பதாக அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் பிரசாரப்படுத்திவருவதாக ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைத்தது என்ற அடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னதாக இதிலிருந்து வெளியேற அல்லது, புதிய தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த வருடம் முக்கிய தேர்தல்கள் வரவிருப்பதால், தமக்குள்ள நெருக்கடிகளையிட்டு மேற்கு நாட்டு இராஜதந்திரிகளுக்கு இலங்கை இராஜதந்திரிகள் விளக்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |