Home » » பல்லாயிரக்கணக்கான மக்கள் வடம் பிடிக்க மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமக்கந்தன் தன்மன் செட்டிகுடி மக்களின் சித்திரத்தேரில் வலம்வந்து மக்களுக்கு அருள்பாலித்த கண்கொள்ளாக் காட்சி

பல்லாயிரக்கணக்கான மக்கள் வடம் பிடிக்க மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமக்கந்தன் தன்மன் செட்டிகுடி மக்களின் சித்திரத்தேரில் வலம்வந்து மக்களுக்கு அருள்பாலித்த கண்கொள்ளாக் காட்சி


அழகு என்றால் அது முருகனைக் குறிக்கும். இயற்கை அழகு என்றால் பசுமை. அந்தப் பெருமைக்குரியது குருக்கள்மடம் என்னும் தமிழ் பண்பாட்டு தனித் தமிழ்கிராமம். தமிழுக்கு அதிபதியும் முருகனே. தமிழின் அழகும் தனித்துவமானது. அவருக்கு அமைத்த சித்திரத்தேரோ பேரழகு. பக்தர்களின் சுய அலங்காரமும் தனி அழகு.  இத்தனை அழகும் கொட்டிக்கிடக்க, மேளதாளத்துடன் சித்திரத்தேரில் முருகன் தேரறி வந்த அற்புதக் காட்சி இன்று (25.08.2018, சனிக்கிழமை) பக்தர்களை
மெய்சிலிர்க்க வைத்தது என்பதில் வியப்பேதுமில்லை.
l
மட்டக்களப்பு மாவட்டத்தில் முருக வழிபாட்டை  முன்னிறுத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்க முருகன் ஆலயங்கள் வெருகல், சித்தாண்டி, மண்டூர் , தாந்தாமலை போன்ற இடங்களில் அமையப்பெற்று கதிர்காமக் கந்தனோடு தொடர்புபட்டவையாக காணப்படுகின்றது. அந்தவகையில் கீர்த்திமிகு செல்லக்கதிர்காமத்தை ஆலயத்தின் பெயரோடு இணைத்து ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயம் என்ற பெயரோடு குருக்கள்மடத்தில் அமையப்பெற்ற முருகன் ஆலயம் பல  சரித்திரச் சான்றுகளுடன் நூற்றாண்டுகளைக் கடந்து தொன்மை பெற்றுக் காணப்படுகின்றது. கதிர்காமத்தோடு ஆதிகாலம் தொட்டே உலககுருநாதரினால் தொடர்பில் இருந்த சிறப்பு பெற்ற ஆலயம்.  

இந்தியாவிலுள்ள வேதாரணியத்தில், குரு என்றழைக்கப்படும். உலக குருநாதர் கதிர்காமத்தை தரிசிப்பதற்காக மட்டக்களப்பிற்கு வருகை தந்தபோது. வேதப்பிட்டி என்றழைக்கப்பட்ட இக் கிராமத்தில் தரித்து நின்று இறைபணியில் ஈடுபட்டதாக வரலாறு கூறுகின்றது. அவர்கள் கொத்துப் பந்தல் அமைத்து ஆரம்பித்ததே இந்த ஆலயமாகும். ஆது இன்று முழுமையாக வளர்ச்சியுற்று தொன்மையுறு ஆலயமாக தோற்றமளிக்கின்றது. அத்துடன் உலக குருநாதருக்கு கதிர்காமக் கந்தன் இவ்வாலயத்தில் காட்சி கொடுத்த அற்புதமும் பதிவாகியிருக்கின்றது. இதனால் ஆலயத்தின் பெயர்ப் பொருத்தம் (கதிர்காம அடைமொழியுடன்) உறுதி செய்யக்கூடியதாக இருக்கின்றது. ஊருக்கான பெயரும் குரு நாதர் மடம் அமைத்து சைவப் பணிபுரிந்ததால் குருக்கள்மடம் என காரணப் பெயர் கொண்டதும், தெளிவாக இருக்கின்றது.        

மட்டக்களப்பு நகருக்கு தெற்கே மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியை அண்டி குருக்கள்மடத்தில், இயற்கைச் செழிப்புடன் அமையப்பெற்ற ஆலயம் பற்றி இங்குள்ள மக்கள் அற்புதம் புரிகின்ற ஆலயம் என்றே பயப க்தியுடன் கூறுவர். வருடந்தோறும் செப்ரம்பர் ஆரம்பத்தில் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

1ம் நாள் திருவிழா செட்டிகுடி, பெரிய கவுத்தன் குடியினராலும், 2ம் நாள் திரவிழாகுருக்கள் குடியினராலும். 3ம் நாள் திருவிழா தெவேந்திரகுடி. பட்டணக்குடி மக்களாலும். 4ம்நாள் சிங்களக் குடியினராலும் 5ம் நாள் திருவிழா கவுத்தன் குடியினராலும். 6ம் நாள் திருவிழா வச்சினா குடியினராலும். 7ம் நாள் திருவிழா குருக்கள் அத்தியா குடியினராலும்., 8ம் நாள் திருவேட்டைத் திருவிழா செட்டிப்போடியார் அத்தியா குடியினராலும், 9ம் நாள் திருவிழாவும், தேரோட்டமும். தன்மன் செட்டிகுடி மக்களாலும், நடாத்தப்படுவது வழக்கமாகும். மட்டக்களப்பு மாவட்டம் முழுக்க ஆலயங்களில் குடி மரபு பேணப்பட்டுவருவது விசேட அம்சமாகும்.

அந்த வகையில் தேரோட்டத்தை  தன்மன் குடிமக்கள் மேற்கொள்வது இவர்களின் பாக்கியமாகும். 'உடலாகிய தேரில்; உள்ளமாகிய பீடத்தில் இறைவனை நித்தம் சுமந்து வீதி வலம் வருகின்றவர்கள் பெற்ற பாக்கியமே மானிடப் பிறவி' என்று திருமுருக கிருபானந்தவாரியார்; தெரிவித்த கருத்து தேரின் அவசியத்தை எமக்கு உணர்த்துகின்றது.

ஆலயம் வளர்ச்சிபெற்ற காலத்தில் தேரோட்டம் இருந்தது. பின்னர் அது  மருவி தற்போது 2014 தொடக்கம் மீள்; எழுச்சி பெற்றுள்ளது. அன்றைய தினம் சித்திரத்தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இச் சித்திரத்தேர் தன்மன் செட்டி குடியைச்சேர்ந்த சைவநெறி ஒழுக்கசீலர் தமிழ் ஆசிரியர், அதிபர் என சமூக நன்மதிப்பிற்குரிய சாமித்தம்பி அழகரெத்தினம் நினைவாக அன்னாரின் மகனான வைத்திய கலாநிதி கங்காதரனால் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இன்று 25.08.2018 சனிக் கிழமை பல்லாயிரக்கணக்கான மக்கள் வடம் பிடிக்க  மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமக்கந்தன் தன்மன் செட்டிகுடி மக்களின் சித்திரத்தேரில் வலம்வந்து மக்களுக்கு



அருள்பாலித்த கண்கொள்ளாக் காட்சி













Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |