முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மே 18ஆம் நாளை, துக்கநாளாகவும், தமிழினப் படுகொலை நாளாகவும் வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது.தமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் வழக்கம் போலவே, நாளை பாரிய நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முள்ளிவாய்க்கால் படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான ஒழுங்கமைப்புகளில் வடக்கு மாகாணசபைக்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையில் நீடித்து வந்த இழுபறிகளுக்கு முடிவு காணப்பட்டு, அனைத்து தரப்புகளும் இணைந்து நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நாளை காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் பாரிய உந்துருளிப் பேரணி ஒன்றை முள்ளிவாய்க்கால் நோக்கி நடத்தவுள்ளனர்.இந்தப் பேரணி, முள்ளிவாய்க்காலை சென்றடைந்ததும், காலை 11 மணிக்கு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெறும்.

நிகழ்வு ஒழுங்கமைப்பு, பங்கேற்கும் மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளில், வடக்கு மாகாணசபை, முன்னாள் போராளிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, தயாராகியுள்ளது.
இதற்கு முன் இருந்திராத வகையில் பெருமளவு மக்களை அணிதிரட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்குபடுத்துவதில் அனைத்து தரப்புகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.இந்த நிகழ்வில் பெருமளவு மக்களை பங்கேற்க வைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. வாகன வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.(15)
0 Comments