|
சர்வதேச பங்களிப்புடன் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவி பொறுப்புக்கூறல் விவகாரங்களைத் தீர்க்க வேண்டும், இதனை முன்னெடுக்காவிடின், சர்வதேச நியாயாதிக்கம் என்ற மாற்றுவழியை ஆராயுமாறு உறுப்புநாடுகளை கோருவோம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
|
ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற ஜெனிவா பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்து சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையிலேயே செய்ட் அல் ஹுசெய்ன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையுடன் ஈடுபாட்டுடன் செயற்படும் இலங்கையின் செயற்பாட்டை வரவேற்கின்றோம். எனினும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதில் இலங்கை தாமதத்தை கடைபிடிக்கின்றமை கவலைக்குரியதாகும்.
மேலும் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுக்குள் ஜெனிவா பிரேரணையை இலங்கை முழுமையாக அமுல்படுத்தும் என்பது சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளது. அத்துடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு 20 மாதங்கள் கடந்தே காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அதிருப்தியடைகின்றோம்.
அத்துடன் காணிகளை மீள் வழங்குவதில் தாமதம் நீடிக்கின்றது. காணிகளை தொடர்ந்து அபகரித்தால் நம்பிக்கை கட்டியெழுப்புவது கடினமாகும். மேலும் காணிகளுக்கான நட்ட ஈடுகள் சுயாதீன பொறிமுறைகள் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மை மக்கள் மீதான இன ரீதியான தாக்குதல் குறித்து நாம் கவலை அடைகிறோம். கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலினால் 12 நாட்களுக்கு அவசரகால நிலையை கொண்டுவர நேர்ந்தது. சித்திவதைகள் தொடர்வதாகவும் மனிதஉரிமை காப்பாளர்களை கண்காணிப்பது தொடர்பாகவும் அறிக்கையிடப்படுகிறது.
எப்படியும் இலங்கையின் இந்த நிலைமை தொடர்பிலும் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் குறித்தும் ஐ.நா. மனித உரிமை பேரவை அவதானத்துடன் இருக்க வேண்டும் என கோருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
|


0 Comments