இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பொப்பிசைச் சக்கரவர்த்தி A .E .மனோகரன் காலமானார்.நீண்ட காலமாக சென்னையில் வசித்து வந்த அவர் நேற்று இரவு 7.20 அளவில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் பாடிய சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிக மாலுகெனாவா… என்ற பாடல் இலங்கை, இந்திய ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது
இந்திய தமிழ் சினிமாவில் “சிலோன் மனோகர்” என்று அழைக்கப்பட்ட அவர் காஷ்மீர் காதலி, தீ, அதே கண்கள், ராஜா நீ வாழ்க, காட்டுக்குள்ளே திருவிழா , உலகம் சுற்றும் வாலிபன், நீதிபதி, லாரி டிரைவர் ராஜாகண்ணு, காதல் கொண்டேன், பாண்டித்தியம், ஜே ஜே போன்ற சுமார் 75-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
மேலும் மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் நடித்து புகழ் பெற்ற A .E .மனோகரன் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாசநிலா, வாடைக்காற்று, புதிய காற்று திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.பல மொழிகளிலும் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்த A .E .மனோகரன் தனது அந்திம காலங்களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்டகாலமாக சென்னையில் வாழ்ந்து வரும் ஏ.இ.மனோகரன், இந்தியக் கலைஞர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் அவர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களில் மேடைகளில் பொப்பிசைப் பாடல்களை பாடி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.
1970, 80 களில் இலங்கை வாணொலியிலும் அவரது பாடல்கள் தினமும் ஒலிபரப்பட்டு வந்தன. மனோகரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.இவரின் புகழுடல் பொதுமக்கள், கலைஞர்கள் உள்ளிட பலதுறையினரின் அஞ்சலிக்குப் பின்னர், எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை சென்னையில் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் கூறியுள்ளனர்


0 Comments