Home » » இரண்டு கோடி விவகாரம்: நடந்தது இது தான் எம்.ஏ.சுமந்திரன் விளக்கம்

இரண்டு கோடி விவகாரம்: நடந்தது இது தான் எம்.ஏ.சுமந்திரன் விளக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட இரண்டு கோடி ரூபாய் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இவ்வாறு விளக்கமளித்துள்ளார். அவர் அங்கு தெரிவித்ததாவது,
துரதிஸ்ட வசமாக சில பொய்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு தரப்பட்டுள்ளது. பொய்களுக்கு கொடுக்கின்ற விளக்கம், பொய்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் கொடுக்கப்படுவதில்லை. இதை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொய்கள் எப்படியானவை என்பதை விளங்கப்படுத்துவதற்காக கொடுக்கப்படுகின்ற விளக்கம். ஏனென்றால் இப்படியான பொய்களை சொல்பவர்கள் எப்படியானவர்கள் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.
சுமந்திரன் மந்திரியாக இருந்தார் என்று எல்லா பத்திரிகைகளும் பிரசுரித்தது. மந்திரியானால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும். அந்த விளக்கமும் தெரியாமல் அப்படியொரு பொய். ஒரு வீடு கொடுக்கப்பட்டுள்ளதாக திரு சுரேஸ் பிறேமச்சந்திரன் சொன்னார். நான் அப்படி என்றால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கிறேன் என சொன்னேன். அதற்கு பிறகு ஒரு விலாசத்தையும் சொல்கிறார். நான் போய் பார்த்தேன். அங்கே இருப்பது பங்களாதேஸ் உயர் ஸ்தானிகரது அலுவலகம். நோர்வே உயர் ஸ்தானிகரது வீடு. அவுஸ்ரேலிய மற்றும் சுவிஸ்லாந்து உயர் ஸ்தானிகரது வீடு. அவர் சொன்ன ஒரு வீட்டையும் நான் கண்டு பிடிக்க முடியவில்லை. சொல்கிற பொய்யை அப்பட்டமாக ஒரு வித கூச்சமும் இல்லாமல் பகிரங்கமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தான் வரவு செலவுத் திட்டத்திற்கு தலா இரண்டு கோடி லட்சம் கொடுக்கப்பட்டதாக திரு நடேசு சிவசக்தி வவுனியாவில் வைத்து சொல்லியிருக்கிறார்.
நடேசு சிவசக்தி என்ற பாராளுமன்ற உறுப்பினர் இதற்கு முதல் பல வரவு செலவுத் திட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச காலத்தில் 2010 ஆம் ஆண்டு ஆதரவாக வாக்களித்தவர். இந்த புதிய அரசாங்கத்தில் இதற்கு முதல் இரண்டு தடவைகள் ஆதரவாக வாக்களித்தவர். அவரிடம் நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி ஆதரவாக வாக்களிப்பதற்கு லஞ்சம் வாங்கித் தான் வாக்களிப்பதாக இருந்தால் இதற்கு முன்னர் நீங்கள் ஆதரவாக வாக்களித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கினீர்கள் என்பதை நீங்கள் மக்களுக்கு சொல்ல வேண்டும்.
உளவு வேலைக்களாக ஒரு அடுக்குமாடி வீடொன்றை இங்கு உங்களுக்கு கொடுத்துள்ளனர். உங்களுக்கும், ஈபிடிபிக்கும், றிசாட் பதியுதீனுக்கும் இங்கு விடுதி வழங்கப்பட்டிருக்கிறது தானே. அதை ஒரு சில நாட்களுக்கு முன்னர் வரை ஒரு வித வாடகையும் இல்லாமல் வைத்திருந்தீர்கள் தானே. தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டு அதை மீள கையளிக்குமாறு சொல்கிற வரைக்கும் அதை வைத்திருந்தீர்கள் தானே. இப்படியானவர் எந்த துணிச்சலோடு இப்படியான பொய்களை திருவாய் மலர்கிறார். சில பத்திரிகைகள் எழுதுகின்றன சிவசக்தி ஆனந்தன் இப்படி சொல்லிற்றார். கூட்டமைப்பு எம்.பிமார் வித்தியாசமான விளக்கம் சொல்கிறார்கள். அதனால் அவர் சொல்வதில் ஏதோ உண்மை இருக்க வேணடுமாம். நானும் படித்து பார்த்தேன். அந்த இரண்டு, மூன்று விளக்களையும் ஒரு வித்தியாத்தையும் காணல.
திரு சிறிதரன் எங்களுக்கு ஒருவரும் கையில் இரண்டு கோடி தரவில்லை என்று சொல்லியிருக்கிறார். அது சரி. ஒருவருடைய கையிலும் பணம் கொடுக்கப்படவில்லை. திரு சேனாதிராஜா எப்படி செலாவனது என பட்டியல் கொடுத்திருகிறாராம் . அதனால் அது முரண்பட்ட செய்தியாம். மாவட்ட செயலகம் அதனை எப்படியாக செலவு செய்கின்றது என்பதையே அவர் சொல்லியிருக்கிறார். அவர்கள் கையில் தந்தார்கள். நான் இப்படி செலவு செய்திருக்கின்றேன் என்றா சொல்லியிருக்கிறார் இல்லையே. திரு சித்தார்த்தன் வவுனியாவில் சொல்லியிருக்கிறார் தனக்கு முதலில் தெரியாது. நான் முன்மொழிவுகளை கொடுக்கப் போகிறேன். நீயும் கொடு என ஆனந்தனிடம் சொன்னராம். ஆனால் அவர் கொடுக்க மாட்டன் என்றாராம். வவுனியாவிற்கு அந்த நிதியில் இருந்து அபிவிருத்திக்கு நிதியை பயன்படுத்த ஆனந்தன் விரும்ப வில்லை. வவுனியாவிற்கு வரவிருந்த நிதியை அவர் பிரயோசனப்படுத்தவில்லை.
இந்த நிதி ஒரு விசேட நிதியாக வடக்கு, கிழக்குக்கு கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒவ்வொரு வரவு செலவுத் திட்டத்திலும் வடக்கு, கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது என்று பேசியிருக்கிறோம். விசேடமாக போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மற்ற மாகாணங்களைப் போல் அல்லாது விசேடமாக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என கோரியுள்ளோம். இதைவிட கூடுதலான விடயங்களை பேசி நாங்கள் பெற்றிருக்கின்றோம். அதற்காக நாங்கள் பெறவில்லை. நாங்கள் பேசி மக்கள் பெற்றிருக்கிறார்கள். இதைவிட கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவை பல திட்டங்களுக்காக பெறப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இந்த வருடம் செப்ரெம்பர் மாதத்தில் இது நடந்தது. வரவு செலவு திட்டத்தில் நாங்கள் டிசம்பரிலேயே வாக்களித்தோம்.
செப்ரெம்பர் மாதத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒரு சுற்றறிக்கை போனது. அதற்கு பிறகு பிரதமர் செயலகத்தில் இருந்து வடக்கு, கிழக்கு மாவட்ட செயலங்களுக்கு ஒரு சுற்றறிக்கை போனது. இந்த திட்டத்திற்கு வேறு பெயர் இருக்கிறது. மேலதிகமாக கிராமிய மேம்பாட்டுக்கான விசேட செயற்திட்டம் இது. இந்த நிதியை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று அந்த மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து யோசனை கேட்கப்பட்டது. நாங்கள் கொடுத்தது யோசனைகள் தான். முன்மொழிவுகள் இல்லை. மக்கள் பிரதிநிதிகளை கேட்காமல் எப்படி செய்வது. அதற்கு பிறகு சத்தம் போடுவோம். கொழும்பில் இருந்து மக்கள் பிரதிநிதிகளை கேட்காது தான் நினைத்ததை சொய்கிறார்கள் என்று கூறுவோம். அதற்கமைவாக எமது யோசனைகளை வழங்கினோம். அதுவும் என்ன திட்டத்திற்கு கீழே அதனை வழங்க முடியும் என 14 விடயங்களை உள்ளடக்கிய நிரல் ஒன்று வழங்கப்பட்டது. சில அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அந்த நிரல்களுக்குள் அடங்கவில்லை.
என்ன படிமுறையின் கீழ் ஒதுக்க வேண்டும் என எங்களுக்கு எல்லாம். கடிதம் வந்தது. அதை விட்டு ஒதுக்கினால் நிராகரிக்கப்படும் என தெரிவித்திருந்தார்கள். அப்படியாக எங்களுடைய முன்மொழிவுகளைத் தான் கொடுத்தோம். பணம் ஒன்றும் எங்களுக்கு வாறதில்லை. அமைச்சிடம் இருந்து மாவட்ட செயலகத்திற்கு பணம் ஒதுக்கப்படும். மாவட்ட செயலகம் தான் அதனை உபயோகிப்பது. திரு சேனாதிராஜா அவர்கள் அந்த பணத்தை எவ்வாறு செலவு செய்வது என்ற யோசனைகளை முன்மொழிந்ததை வெளியிட்ட பின்னர் இன்னொரு குற்றச்சாட்டு. அவர் அந்த முன்மொழிவுகளை குறித்தொரு மாவட்டத்திற்கும், பகுதிக்கும் ஒதுக்கியுள்ளார். அது நாங்கள் எங்களுக்குள் பேசி அவர் ஒரு குறித்த பிரதேசத்திற்கு, நான் இன்னொரு குறித்த பிரதேசத்திற்கு, திரு சித்தார்த்தன் வேறொரு குறித்த பிரதேசத்திற்கு, திரு சரவணபவன் வேறொரு குறித்த பிரதேசத்திற்கு, சிறிதரன் வேறொரு குறித்த பிரதேசத்திறகு என நாங்கள் எங்களுக்குள் பேசி அதை பிரித்து எல்லா பிரதேசங்களிலும் நடக்கக் கூடியதாக முன்மொழிவு திட்டஙகளை கொடுத்திருக்கிறோம்.
ஆகவே, சிரிப்புக்கிடமான குற்றசாட்டுக்கள் வைக்கிறார்கள். ஆனால் சிரிப்புக்கு இடமானது என விடமுடியாதுள்ளது. ஏனெனில் அதை வைத்து ஒவ்வொரு நாளும் விமர்சனங்கள் எழுதுகிறார்கள். பத்திகைகளில் ஆசிரியர் தலையங்கள் வருகிறது. பத்திரிகை ஆசிரியர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவல்லை. அப்ப இது அரசியல் லஞ்சம் தானே என ஒருவர் எழுதுகிறார். திரு ஆனந்தனை பார்த்து சிரிப்பதா அல்லது பத்திரிகை ஆசிரியர்களை பார்த்து சிரிப்பதா என்று எனக்கு தெரியவில்லை. இந்தவகையில் எந்தவித அடிப்படைகளும் இல்லாமல் தரக்குறைவான செயலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை வேறு சிலர் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இன்றோடு இந்தப் பேச்சு இறுதி பெற வேண்டும். இது குறித்து பேசுவதற்கு இன்னும் எதுவும் இருக்க முடியாது. இதுக்கு பிறகும் விளக்கம் இல்லை என்றால் இந்த இடைக்கால அறிக்கையில் ஒன்றும் இல்லை என விமர்சிப்பவர்களைப் போல தான் பார்க்க வேண்டியுள்ளது என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |