Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இந்த தேர்தலில் தமிழ் மக்கள் உறுதியான முடிவினை எடுப்பார்கள் -முன்னாள் மாகாணசபை உறுப்பினர்

தமிழ் மக்கள் அரசியல் ஞானம் பெற்றவர்களாக இருக்கின்றார்கள். இந்த தேர்தலை எதிர்கால தீர்வுடன் ஒப்பிட்டு தமிழ் மக்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடுகளுமில்லை. எந்தவொரு கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சவாலாக எடுக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் டெலோ என அழைக்கப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். உள்ளுராட்சிசபைகள் தொடர்பான பங்கீடுகள் தொடர்பில் தமிழரசுக்கட்சிக்கும் டெலோவுக்கும் இடையில் இருந்த முரண்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்ப இம்முறை பாரிய வெற்றியைப்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பதினான்காம் திகதி நான்கு சபைகளுக்கான வேட்பு மனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையளித்திருக்கின்றது. ஏறாவூர் பற்று, ஏறாவூர் நகரம், கோறளைப்பற்று, மண்முனைப்பற்று ஆகிய நான்கு சபைகளுக்கான வேட்புமனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்ததுடன் நேற்றைய தினம் காத்தான்குடி தவிர்ந்த ஏனைய மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு சபைகளுக்கான கட்டுப்பணத்தை நாங்கள் செலுத்தியிருக்கின்றோம்.
கடந்த சில வாரங்களாக உள்ளுராட்சி தேர்தல் சம்பந்தமாக பல குழப்பங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்ததாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எங்களுக்குள் எந்தவிதமான குழப்பங்களும் இருக்கவில்லை. பல தடவைகள் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் மாறிமாறி நடைபெற்றது. கருத்து முரண்பாடுகள் இருந்தது.
அந்த கருத்து முரண்பாடுகள் அனைத்தும் இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களின் காரியாலயத்தில் நடந்த கூட்டத்தில் இறுதிய முடிவு காணப்பட்டு நாங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்து மூன்று கட்சியை சேர்ந்த தலைவர்களும் கையொப்பமிட்டு தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம்.
அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் இரண்டு,மூன்று நாட்களாக தொகுதிப் பங்கீடு சம்பந்தமாக கூடிப் பேசியிருந்தோம். கொழும்பிலே தலைமை எடுத்த முடிவுக்கு அமைய எள்ளளவேனும் வித்தியாசமில்லாமல் குழப்ப நிலையும் இல்லாமல் தொகுதி உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்கின்றன.
அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி தேர்தலில் மூன்று கட்சிகளை சேர்ந்த நாங்கள் ஒரு முன்னுதாரணமாக ஒருமித்து இணைந்து கூட்டாக இணைந்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு நாங்கள் போட்டியிடும் அனைத்து சபைகளிலும் பெரும்பான்மையான வெற்றியை பெறுவதற்கு உறுதி பூண்டிருக்கின்றோம்.
தமிழ் மக்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இருப்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஒரு உறுதியான தீர்வுத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தல் அதற்கு ஒரு ஆணையாக அமைய வேண்டியதாக இருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அதற்கான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருக்கின்றது. நாங்கள் நிரந்தர அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்களை திருப்திப்படுத்தாத அரசியல் தீர்வாக அது அமையுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எக்காரணம் கொண்டும் அதனை ஏற்றுக்கொள்ளாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அதில் உறுதியாக இருக்கின்றது.
கடந்த காலங்களில் இடைக்கால அரசியல் தீர்வு சம்பந்தமாக இடைக்கால அறிக்கையொன்று வந்திருந்தது. அது இறுதித் தீர்வல்ல. அந்த இடைக்கால அறிக்கையை வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரைகுறையான தீர்வை ஏற்றுக்கொண்டதாக பிரச்சாரம் செய்கின்றார்கள். அப்படியல்ல. இறுதித் தீர்வு எமது மக்களின் அபிலாஷைகளை திருப்தித்படுத்தாத தீர்வாக அமைந்தால் நாங்கள் எக்காரணம் கொண்டும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
அதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் எமது மக்கள் இருக்கின்றார்கள் என்பதனை இந்த நாட்டிற்கும் இந்த அரசிற்கும் சர்வதேசத்திற்கும் நாங்கள் நிரூபித்துகாட்டுவதற்காக தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே அணியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சின்னமான தமிழரசுக் கட்சியின் அலுவலக சின்னமான வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு பலம் மிக்க சக்தியாக உருவாக்க வேண்டியது தமிழ்மக்களின் கடமையாகும். இந்த தேர்தலை மக்கள் ஆணையாக நினைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும்.
நாங்கள் கொழும்பில் எடுத்த தீர்மானங்கள் சம்பந்தமாக சில உள்ளுராட்சி பிரதேச சபைகளுக்கு தொகுதிப் பங்கீட்டில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக அறிகின்றேன். இன்று எங்களது தலைவர் தமிழரசுக் கட்சியின் தலைவரை சந்தித்து அதற்கான தீர்வு காண்பதாக கூறியிருக்கின்றார். நிச்சயமாக அதற்கான தீர்வு வரும்.
தமிழ் மக்கள் அரசியல் ஞானம் பெற்றவர்களாக இருக்கின்றார்கள். இந்த தேர்தலை எதிர்கால தீர்வுடன் ஒப்பிட்டு தமிழ் மக்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடுகளுமில்லை. எந்தவொரு கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சவாலாக எடுக்காது.
மக்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு இருப்பதாக நான் அறியவில்லை. உதயசூரியன் சின்னத்திலே போட்டியிட நினைத்தவர்கள் கூட பட்டிருப்பு தொகுதியிலே சுயேட்சையாக இறங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டு அரசாங்கம் நடத்துகின்றது என்பது வதந்தியாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை பாராளுமன்றத்திலே எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராவார். கூட்டாக நாங்கள் இந்த நாட்டில் ஒரு அரசியல் தீர்வு வரவேண்டும் என்பதற்காக பாராளுமன்றத்தை பயன்படுத்துகின்றோம்.
அரசியல் தீர்விற்கு ஆளங்கட்சியில் இருக்கின்ற பிரதான இரு அரசியல் கட்சிகள் இணங்கியிருப்பது மாத்திரமல்லாமல் இந்த நாட்டிலே ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய ஜே.வி.பி.கூட அரசியல் தீர்விற்கு கைகொடுப்பதாக கூறியிருக்கின்றார்கள். இந்த ரீதியில் தான் அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்திருக்கின்றதே தவிர கூட்டரசாங்கமாக நாங்கள் செயற்படுகின்றோம் என்பது தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓரங்கட்ட நினைக்கும் ஒரு சில சக்திகளின் செயற்பாடாகும். இந்த நாட்டில் நிரந்தர தீர்வு வரக்கூடாதென நினைப்பவர்கள் தான் அவ்வாறு கூறுகின்றார்கள்.
இந்த நாட்டில் தெற்கிலே இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி தவிர்ந்த ஏனையவர்கள் இருக்கின்றார்கள். மகிந்த தரப்பினர் வரப்போகும் அரசியல் தீர்வுத் திட்டத்தை குழப்புவதற்கும் அதற்கு எதிராக பிரசாரம் செய்வதற்கும் வெளிச்சம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி செயற்படுகின்றார்கள்.
இடைக்கால அறிக்கை வந்தவுடன் முழுமையான ஒரு தீர்வுத் திட்டம் வந்துவிட்டதாகவும் அதில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய எதுவுமே இல்லை எனவும், அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்படுகின்றதெனவும் ஒரு போலிப் பிரசாரத்தை செய்கின்றார்களே தவிர ஒரு நிரந்தர தீர்வு இன்னும் வரவில்லை.
இடைக்கால அறிக்கையை மையமாக வைத்து ஒரு நிரந்தர தீர்விற்கான பேச்சுவார்த்தைகள் இனிமேல் தான் நடைபெறப்போகின்றன என்பது தெரிந்த விடயமாகும். அது தெரிந்தும் அவர்கள் இப்படி செயற்பட காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் மத்தியிலிருந்து ஓரங்கட்டி தாங்கள் அந்த அதிகாரத்திற்கு வரவேண்டும் என நினைக்கின்ற சக்திகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் கூட்டாட்சி நடத்துவதாக பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றன.

Post a Comment

0 Comments