கல்வி பொதுத்தராரத உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற துவாரகனின் சாதனை ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் சாதனை என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
|
கல்வி பொதுத்தராரத உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனைப்படைத்துள்ள பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனை நேரில் சென்று வாழ்த்தியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,கடுமையான யுத்த சூழல் மற்றும் பொருளாதாரத் தடைக்கு மத்தியிலும் குப்பி விளக்கில் கல்வி கற்ற காலங்களில் வட மாகாணம் கல்வி செயற்பாடுகளில் இலங்கையில் முதன்மை மாகாணம் என்ற பெருமையைப் பெற்றிருந்தமை யாவரும் அறிந்ததே.
போருக்கு மத்தியிலும் புலிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்தியிருந்தமையே இதற்கு காரணமாக இருந்தது. ஆனால், போர் முடிவுக்கு வந்த பின்னர் திட்டமிட்டு எமது அறிவுத்தளம் சீரழிக்கப்பட்டு வருகின்றது. மது, போதைப் பொருள் பாவனை திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டு வருவதன் ஊடாக மாணவர்களாக இருக்கும் இளைஞர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றார்கள். இதனால் இலங்கையில் முதன்மை மாகாணமாக இருந்துவந்த வட மாகாணம் இன்று கடைசி மாகாணமாக ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றது.
இவ்வாறான நிலையிலும் துவாரகன் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதை அறிந்த போது எனது வீட்டில் ஒருவர் சாதனை படைத்ததாக எண்ணி பெருமைப்பட்டேன். இதே மனநிலையில் தான் எல்லோரும் உள்ளார்கள். அந்த வகையில் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் சாதனையாக துவாரகனின் சாதனை அமைந்துள்ளது.
இதே உத்வேகத்துடன் பட்டப்படிப்பினை நிறைவுசெய்து எமது மக்களுக்கும் மண்ணுக்கும் பெருமை சேர்ப்பதுடன் இங்கேயே சேவையாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
|
0 Comments