|
எதிர்வரும் ஜனவரி மாதம் நடக்க இருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட மூன்று பங்காளிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்றுக் கூடி ஆராய்ந்தன. சுமார் இரண்டரை மணிநேரம் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
|
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் அந்தக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புளொட் சார்பில் அந்தக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், கட்சியின் செயலர் சதானந்தம், கட்சியின் மையக் குழு உறுப்பினரும் வடக்கு மாகாண விவசாய அமைச்சருமான க.சிவநேசன், ரெலோ சார்பில் அந்தக் கட்சியின் செயலரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிறீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான குழு ஒன்றை நியமிப்பது என்றும், அந்தக் குழுவில் ஒவ்வொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தி இருவரை நியமிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் கூட்டமைப்பிலுள்ள எல்லாக் கட்சிகளினதும் உறுப்பினர்கள் போட்டியிடக்கூடியதாக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படவேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்சிக்கும் ஆகக் குறைந்தது ஒரு உள்ளூராட்சி மன்றத்தினது தவிசாளர் பதவியாவது வழங்கப்படவேண்டும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எவ். உள்ளூராட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையினால் அந்தக் கட்சியின் நிலைப்பாட்டை, மாவை.சோ.சேனாதிராசா கேட்டு அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
‘‘இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு நேற்றைய சந்திப்பில் கலந்துகொண்ட கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன’’ என்று தெரிவித்தார் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
‘‘நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களை எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையக் குழுக் கூட்டத்தில் முன்வைத்து அதன் பின்னரே ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்’’ என்று அந்தக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை என்று ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளார். இதையடுத்து எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று கட்சிகளாகச் சேர்ந்து எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
|


0 Comments