அமைதியான உலகைக் கட்டியெழுப்புவதற்கு சமயக் கோட்பாடுகளால் வழங்கப்படும் வழிகாட்டல்கள் மிகவும் முக்கியமானவையாகும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெறும் சர்வதேச பௌத்த மகா சம்மேளனத்தின் 7ஆவது பௌத்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு, அலரி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் இணைத்தலைமையில் நேற்று முற்பகல் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கிணங்க, இவ்வருட மாநாடு, இலங்கையில் நடைபெறுவதுடன், இதில் 47 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 300 பிரதான மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
“உலக சமாதானத்துக்கு பௌத்த சமயம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இந்த பௌத்த மாநாடு, நேற்று முதல் 07ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கமைய, நவம்பர் 02, 03, 04ஆம் திகதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள், அலரி மாளிகையின் பிரதான மாநாட்டு மண்டபத்திலும் நவம்பர் 05ஆம் திகதி இடம்பெறும் நிறைவு விழாவும் கலாசார நிகழ்வும் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கிலும் நடைபெறவுள்ளன. இதன்போது, உலகில் அமைதியையும் விழுமியப்பண்புகளையும் மேம்படுத்துதல் மற்றும் உலகம் முழுவதும் பௌத்த சமயத்தைப் பரவச் செய்வதற்கான பிரகடனமும் வெளியிடப்படவுள்ளது.
இங்கு ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,
“உலகில் தற்போது காணப்படும் பல்வேறு பிரச்சினைகள், நெருக்கடிகள் என்பவற்றைக் கட்டுப்படுத்தி, அமைதியான உலகைக் கட்டியெழுப்புவதற்கு சமயக் கோட்பாடுகளால் வழங்கப்படும் வழிகாட்டல்கள் மிகவும் முக்கியமானவையாகும்.
“பௌத்த மதத்தால் போசிக்கப்பட்ட மிகப் பழமையான வரலாற்றை உடைய நாடாகிய இலங்கையில், இவ்வருட பௌத்த மாநாடு கோலாகலமான முறையில் இடம்பெறுவது மகிழ்ச்சியைத் தருகின்றது. இம்மாநாட்டின் மூலமாக, உலக நாடுகளுக்கு வழங்கப்படும் செய்தியானது காலத்துக்கு உகந்ததாக அமைகின்றது” என்றார்.


0 Comments