மட்டக்களப்பு வாழைச்சேனை சந்தியில் முச்சக்கர வண்டிகள் நிறுத்துவது தொடர்பாக இரு சமூகங்களுக்கிடையே இடம்பெறும் முரண்பாட்டை தவிர்த்துக் கொள்ளும் முகமாக தங்கெளுக்கென ஒதுக்கப்பட்ட தரிப்பிடத்தில் முச்சக்கர வண்டிகளை நிறுத்துமாறு கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் கோறளைப்பற்று மத்தி முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கத்தினருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
குறித்த இடத்தில் முச்சக்கர வண்டிகள் நிறுத்துவது தொடர்பில் அண்மைக்காலமாக கோறளைப்பற்று வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச முச்சக்கர வண்டிகள் தொடர்பாக கோறளைப்பற்று வாழைச்சேனை ஒருங்கினைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கோறளைப்பற்று மத்தி முச்சக்கர வண்டிகள் சங்கத்தினருக்கு இது தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலே இவ் அறிவித்தலை விடுத்துள்ளார்.
கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
27.10.2017ஆந் திகதி நடைபெற்ற கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத் தீர்மானத்தின் பிரகாரம் வாழைச்சேனை பொலிஸ் சுற்று வட்டத்திலிருந்து மட்டக்களப்பு பிரதான பாதை கறுவாக்கேணி கிராம சேவகர் பிரிவிற்குள் வரும் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தினை கறுவாக்கேணி முச்சக்கர வண்டி சாரதிகள் பயன்படுவதற்கு கையளிக்குமாறு இப்பிரதேச சபை பணிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக சுற்று வட்டத்திலிருந்து மட்டக்களப்பு பாதையோரமாக தங்களால் நிறுத்தி வைக்கப்படும் முச்சக்கர வண்டிகளை பொலிஸ் நிலைய சுற்று வட்டத்திலிருந்து பொலன்னறுவை வீதி மற்றும் வாழைச்சேனை வீதியில் தங்களுக்கு ஏலவே ஒதுக்கப்பட்டுள்ள தரிப்பிடங்களுக்கு உடனடியாக இடமாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இத்தரிப்பிடம் தொடர்பில் பொது அமைதியினை ஏற்படுத்துவதற்கு தங்களின் பூரண ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றேன்.
என அந்த கடிதத்தில் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்துள்ளார்

0 Comments