|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இரா.சம்பந்தன் தலைமையில் இன்று காலை கூடவுள்ளது. கடந்த ஒன்பதம் திகதி கூடியிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவில் வரவு செலவுத் திட்ட விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டபோதும் அது குறித்து எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அதே நேரம் வரவு – செலவுத் திட்ட விடயங்கள், வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் இன்றைக்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு சந்திப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
|
அத்துடன் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், கோடீஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் வரவுசெலவுத்திட்டத்தினை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
இவ்வாறான பின்னணியில், இன்று காலை நடைபெறவுள்ள பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவொன்று எடுக்கப்படும் என்றும், உறுப்பினர்கள் அனைவரும் ஏகநேரத்தில் இருக்க முடியாது போனமையினால் ஜனாதிபதியுடனான சந்திப்பினை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டிருந்தாகவும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இன்று நடைபெறும் பாராளுமன்றக் குழு கூட்டத்திலும், வரவு செலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பிலும் ஈ.பி.ஆர்.எல்.எப். பங்கேற்காது என அக்கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் அறிவித்துள்ளார்.
மேலும் மாகாணசபை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்தமை உட்பட எதிர்க்கட்சியின் நல்லெண்ண வெளிப்பாடுகளுக்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக இரண்டு கோடிரூபா பெறுமதியான விசேட நிதியொதுக்கீடு ஒன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு (யோகேஸ்வரன் எம்.பி தவிர்ந்த) மட்டும் கிடைத்துள்ளமை மற்றும் இம்முறை வரவு – செலவுத் திட்டத்திலும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகமாக காணப்படும் அதேநேரம் கடந்தகாலத்திலும் இதுபோன்று கண்துடைப்புக்காக நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டமை உட்பட குறைபாடுகள் இருக்கின்றன.
மேலும் ஜனாதிபதியுடனான சந்திப்பும் இடம்பெறவில்லை. இவ்வாறான விடயங்கள் காணப்படுகின்ற நிலையில் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் பின்னரே குறித்த வரவு – செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பது குறித்த முடிவை எடுக்க வேண்டும். இல்லையேல் எதிர்த்து வாக்களிப்பதை விட மாற்றுவழியில்லை என்ற நிலைப்பாட்டில் ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் இருப் பதாக உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
|


0 Comments