Home » » மட்டக்களப்பில் தமிழ் – முஸ்லிம் இன முரண்பாடுகள் வன்முறையாக உருவாகும் ஆபத்து

மட்டக்களப்பில் தமிழ் – முஸ்லிம் இன முரண்பாடுகள் வன்முறையாக உருவாகும் ஆபத்து

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லீம் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை வன்முறை இன்றி உயிர் ஆபத்துக்கள் ஏற்படாத வகையில் கையாளவேண்டியது இரு இனங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள் , மத தலைவர்களின் தலையாய கடமையாக உள்ளது.குறித்த சந்தர்ப்பத்தை சிலர் தங்களது அரசியலுக்கும் இன்னும் சிலர் பெரும்பான்மை இன அரசியல் தலைமைகளிடம் சிறுபான்மை இன அரசியல் தலைவர்கள் மண்டியிட வேண்டும் என்பதற்காகவும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லீம் இன வன்முறையை உருவாக்க இளைஞர்களி உணர்வுகளை பயன்படுத்த திரைமறைவில் முயற்சிகள் நடக்கின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை வன்முறைகள் ஏற்படாது உயிர் உடைமைகளுக்கு பங்கம் வராமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலீசாருக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் உண்டு.
இதேவேளை குறித்த அசாதாரண சூழ்நிலை உருவாகுவதற்கு தமிழ் மக்கள் பக்கம் உள்ள நியாயமா காரணிகளையும் முஸ்லிம்கள் பக்கம் உள்ள நியாயமான காரணிகளையும் கண்டறிந்து பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
குறிப்பாக கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களின் காணி பிணக்குகள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு விசேட மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட வேண்டும்.
அத்துடன் பிணக்குடன் சம்பந்தப்பட்ட இரு பிரிவினரும் ஒரேமேசையில் அமர்ந்து பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகள் நேற்று உருவானதல்ல 2009 ற்கு பின்னர் உருவானது.
கிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான போக்கு தமிழ் மக்களை அடிமைகளாக உணர வைத்துள்ளது.
அதிகாரமற்ற அரசியல் ஆளுமை அற்ற தலைமைகள், பாரபட்சமான அபிவிருத்தி, வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு, காணி அபகரிப்பு, ஒரு இனத்திற்கு சார்பான அரச நிர்வாக கொள்கை, தமிழ் மக்களின் அனைத்து நிர்வாகங்களின் மீதான ஆக்கிரமிப்பு என தமிழ் சமூகத்தின் மீதான அத்துமீறல்கள் இன்று இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பீட்டளவில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மிகவும் முஸ்லிம் சமூகத்தை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
அரசியல் அதிகாரங்கள் உட்பட அரச நிர்வாகம் வரை முஸ்லிம் தலைமைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லிம்களுக்கான முதலமைச்சராகவே செயல்பட்டுள்ளார். தமிழ் அரசியல் தலைமைகள் தட்டி கேட்க முடியாத கையாலாகாத் தலைவர்களாக உள்ளனர்.
முஸ்லிம் சமூகத்திற்கு உள்ள காணி பிரச்சினை மற்றும் முஸ்லிம்கள் தங்களது பிரதேசத்தை தனி இஸ்லாமிய பிரதேசமாக வைத்துக் கொண்டு தமிழர்களின் பிரதேசத்தில் காணிகளை கொள்வனவு செய்வது வியாபார நிலையங்களை கொள்வனவு செய்வது காணி அபகரிப்பில் ஈடுபடுவது போன்ற விடயங்கள் தமிழ் சமூகம் முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இல்லாது செய்துள்ளது.
இவற்றுக்கெல்லாம் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டிய தமிழ் அரசியல் வாதிகள் கை கட்டி வேடிக்கை பார்ப்பது இளைஞர் மத்தியில் ஒரு வித ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு கிழக்கில் அநீதி நடப்பதாக இளைஞர்கள் உணர்கிறார்கள்.இதன் வெளிப்பாடுகள் இன்று சமூக வலைத்தளங்களில் பிரதிபலிப்பதுடன் யார் யாரையெல்லாம் இன வாதிகள் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்களோ அவர்களை தேடி சென்று அவர்களது இனவாதத்தை இன்று ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
கிழக்கில் நடப்பது அதிகார மோதலோ அல்லது ஆட்சி அமைப்பதற்கான சண்டையோ அல்ல இது இரண்டு இனத்தின் இருப்புக்கான போராட்டம்.
இதில் கடந்த 60 ஆண்டுகாலமாக சிங்கள அரசுடன் போராடி இருப்பதை எல்லாம் இழந்த தமிழ் சமூகம் இன்று முஸ்லிம் சமூகத்திடம் போராடி இருப்பதையும் இழப்பதாக உணர்கின்றனர்.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இயலாமை இளைஞர்களையும் மாற்று சக்திகளையும் களத்தில் இறங்க தூண்டியுள்ளது.
இது ஒரு சாதாரண விடயமல்ல இலங்கையில் இரத்த ஆறு ஓட வேண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெடிக்க வேண்டும் என்று செயற்படும் வெளி சக்திகள் கிழக்கில் உள்ள இந்த கொந்தளிப்பான சூழ்நிலையை பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
எனவே இது குறித்து தமிழ் முஸ்லிம் தலைமைகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தமிழ் சமூகத்தின் நியாயமான யதார்த்தமான எண்ணங்களுக்கு, கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் இஸ்லாமிய வாத சிந்தனைகளை கைவிட்டு கிழக்கில் இரண்டு சமூகங்களும் சமத்துவத்துடன் வாழும் சூழலை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |