அரசியல் என்பதே ஒரு வியூகம்தான். சரியான வியூகங்கள் இன்றி ஒரு சமூகம் அரசியல் ரீதியில் ஆக்கபூர்வமாக முன்னோக்கி நகர முடியாது. அந்த வகையில் பார்த்தால் தமிழர்களின் அரசியல் வியூகம் எவ்வாறு வகுக்கப்பட்டு வருகிறது? கடந்த அறுபது வருடங்களில் தமிழர்களின் அரசியல் வியூகங்கள் எவ்வாறு மாற்றமடைந்திருக்கின்றன என்று பார்ப்போம்? தமிழர்களின் அரசியல் வியூகம் என்பது எப்போதும் எதிர்த்தல் என்பதிலேயே நிலைகொண்டிருந்தது. கொழும்பை எதிர்த்து அடிபணியச் செய்வது. அதற்கான அழுத்தங்களை முகாமை செய்வது. கொழும்மை இறங்கிவரச் செய்வது. இதற்கான முன்னெடுப்புக்களே தமிழரின் பிரதான அரசியல் போக்காக இருந்தது. தமிழ் அரசியல் மிதவாதிகளின் முழுமையான ஆளுகைக்குள் இருந்த காலத்தில் எதிர்ப்பு அரசியல் என்பதன் பெயரால், வன்முறையற்ற அல்லது சாத்வீக வழியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனை உச்சக்கடத்திற்கு எடுத்துச் செல்லும் அர்ப்பணிப்பும் தியாகமும் அன்றைய மிதவாத தலைவர்களிடம் இருந்திருக்கவில்லை என்னும் விமர்சனங்கள் இருக்கின்ற போதிலும் கூட, அன்றைய சூழலில் கொழும்பிற்கு நெருக்கடிகளை கொடுக்கும் வகையில் சில சாத்வீக போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இவ்வாறான எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளின் போது எதிர்ப்புடன் சேர்த்து பிறிதொரு விடயமும் நிகழ்ந்து கொண்டிருந்தது. தமிழ் மக்களின் சார்பிலான அரசியல் கோரிக்கைகளும் மாறுபட்டுக் கொண்டிருந்தன. ஆரம்பத்தில் ஜக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு என்னும் நிலையில் இருந்த கோரிக்கைகள் படிப்படியாக பெருத்துக் கொண்டு சென்றது. இறுதியில் 1976இல் தனிநாட்டுக்கான பிரகடனமாக அது வடிவம் பெற்றது. இதனையும் தமிழ் தலைவர்கள் ஒரு அரசியல் வியூகமாகத்தான் கையாண்டனரா? கோரிக்கைகளை வலுவாக்கிக் கொண்டு செல்லும் போது அதுவும் கொழும்பின் மீதான ஒரு அழுத்தமாக உருமாறும் என்றும் அவர்கள் கணித்திருக்கலாம். இப்பத்தியாளர் இவ்வாறானதொரு புரிதலை நோக்கிச் சிந்திப்பதற்கு ஒரு தெளிவான காரணமுண்டு. தமிழ் மிதவாதிகள் தங்களால் தனிநாடு ஒன்றை அடைய முடியுமென்று உண்மையிலேயே நம்பியிருந்தால், தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்துவிட்டு பின்னர் 1982இல் மாவட்ட சபையை நோக்கிச் சென்றிருக்க மாட்டார்கள். மிதவாதிகளின் இந்த குத்துக்கரண அரசியல்தான் இளைஞர் இயக்கங்கள் மிதவாதிகளுக்கு எதிராக திரும்பியற்கு முக்கியமான காரணம். இந்த பின்புலத்தில்தான் அமிர்தலிங்கத்தின் கொலை இடம்பெற்றது. ஆனால் அது அமிர்தலிங்கத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. இந்தக் கட்டத்துடன் தமிழ் மிதவாதிகளின் அரசியல் ஆளுகை முடிவுக்கு வருகிறது. 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் விழும் வரையில் தமிழ் மிதவாதிகளுக்கு தமிழ் அரசியலில் எந்தவொரு இடமும் இருந்திருக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்?

இளைஞர் இயக்கங்கள் தமிழர் அரசியலை தங்களின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது தமிழர் அரசியல் வியூகம் என்பது வன்முறை அரசியலாக வடிவம் பெறுகிறது. இதன் பின்னரான காலப்பகுதி என்பது, கொழும்புடன் ஊடாடுவது என்பதற்கு மாறாக கொழும்மை முற்றிலுமாக பலவீனப்படுத்துவது என்னும் வியூகமாக மாறுகிறது. அதாவது இலங்கை அரசை நிலைகுலையச் செய்து தனிநாட்டை ஸ்தாபிப்பது. இவ்வாறு தனிநாட்டை நிறுவலாம் என்று நம்பிய அனைத்து இயக்கங்களும் அதற்காக தங்களை நம்பியதை விடவும், இந்தியாவையே அதீதமாக நம்பியிருந்தன. ஆனால் இந்தியாவிடம் அப்படியான எண்ணங்கள் எதுவும் இல்லை என்பதற்கும் அப்பால் அதனை இந்தியா அனுமதிக்கவும் போவதில்லை என்பதை தெளிவாக அறிந்த பின்னர்தான், தங்களின் தனிநாட்டுக் கொள்கையை கைவிட்டு ஜக்கிய இலங்கைக்குள் தீர்வு என்னும் நிலைப்பாட்டை நோக்கிக் கீழிறங்கின. ஒப்பீட்டடிப்படையில் தமிழ் மிதவாதிகளை விடவும் தமிழ் இயக்கங்களிடம் ஒரு தெளிவான வியூகம் இருந்தது. அந்த வியூகம் வெறுமனே நாங்கள் தனித்து போராடுவதால் மட்டும் விடயங்களை சாதிக்க முடியாது மாறாக எங்களின் போராட்டத்தை ஆதரிப்பதற்கு ஒரு பலமான நாடு தேவை. அவ்வாறில்லாது விட்டால் எங்களால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது என்னும் புரிதல் இருந்தது. அன்றிருந்த உலக ஒழுங்கிற்கு அமைவாகவே இந்தியா இலங்கை பிரச்சினையில் நேரடியாக தலையீடு செய்தது. ஆனாலும் இயக்கங்களை வழிநடத்திய தலைவர்கள் எவரும் பெருமளவிற்கு புவிசார் அரசியல் நிலைமைகளை சரியாக கணித்து விடயங்களை கையாளக் கூடியவர்களாக இருந்திருக்கவில்லை. ஒரு தனிநாட்டை உருவாக்குவது என்பது ஒரு சாதாரண விடயம் போன்றே எண்ணிக் கொண்டனர். இதன் காரணமாகத்தான் அடுத்த பொங்கலுக்கு தமிழ் ஈழம் என்று சிந்திக்குமளவிற்கும் அதனை நம்பும் அளவிற்குமான நிலைமைகள் அன்றிருந்தன. ஆனால் இந்த விடயத்தில் இறங்கிய பின்னர்தான் தாங்கள் எவ்வளவு ஆபத்தான ஆட்டத்தை ஆடப் போகின்றோம் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. ஆனாலும் விடுதலைப் புலிகள் தனித்து அந்த ஆபத்தான ஆட்டத்தை ஆட முடியுமென்று நம்பினர். அதற்காக உச்சளவிலான அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் செய்தனர். ஆனாலும் அந்த தியாகங்களையும் அர்ப்பணிப்புக்கனையும் உலகம் அங்கீகரிக்கவில்லை.
இந்த கணிப்பின் படி நோக்கினால், கடந்தகாலங்களில் ஏதொவொரு வகையில் தமிழர் தரப்பின் அரசியலில் ஒரு வியூகம் இருந்துதான் இருக்கிறது. ஆரம்பகால தமிழ் மிதவாதிகளிடமும் தமிழ் இளைஞர் இயக்கங்களிடமும் தங்களின் வியூகங்களின் இலக்கு தொடர்பில் தெளிவிருந்தது. இயக்கங்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் வரையில் இந்த நிலைமையில் ஆரோக்கியமான சூழ்நிலையே காணப்பட்டது. இயக்க மோதலின் பின்னரான குறிப்பிட்ட காலத்தில் இயக்கங்கள் மத்தியில் பிரதான எதிரியை விட்டுவிட்டு தங்களுக்குள் எதிரிகளை இலக்கு வைப்பதும் அதற்கான வியூகங்களை வகுப்பதுமாக நிலைமைகளில் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது. விடுதலைப் புலிகள் ஏனைய இயங்கங்களை தடைசெய்த பின்னர் விடுதலைப் புலிகளை ஒரு பிரதான எதிரியாகப் பார்க்கும் போக்கு தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் மத்தியில் உருவானது. இதனை கொழும்பு தனக்கு சாதாமாகப் பயன்படுத்திக் கொண்டது. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் பலமடைந்து சென்று கொண்டிருந்த காலத்தில் அதனை தடுக்கும் ஒரு உக்தியாக கொழும்பு உள் முரண்பாடுகளை கையாண்டது. கொழும்பின் இந்த வியூகத்திற்குள் சில தமிழ் இளைஞர் இயக்கங்கள் மட்டுமல்ல (தமிழரசு கட்சி) தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களும் அகப்பட்டிருந்தனர்.
உள் முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் ஒரு சமூகம் தனது சொந்த முரண்பாடுகளை முகாமை செய்ய முடியாமல் போகும் போது அதனை ஏனைய சக்திகள் தங்களின் தேவைக்கு ஏற்ப முகாமை செய்வர். கிறிஸ்தவர்களிடம் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இடைவெளிகளை ஏற்படுத்தினால் அந்த இடைவெளிகளில் சாத்தான் அமர்ந்து விடுவார். எங்களின் உள்முரண்பாடுகளை சரியாக கையாள முடியாமல் போகும் போது, அந்த உள்முரண்பாடுகளை தங்களின் தேவைக்கு ஏற்ப கொழும்பின் சாத்தான்கள் நிச்சயம் பயன்படுத்துவர். இதற்காக ஏனைவர்களை குறை கூறுவதிலும் பொருளில்லை. அரசியலில் ஒவ்வொருவரும் தங்களின் நலன்களை முன்னிறுத்தித்தான் பணியாற்றுவர். எங்களது நலன்கள் எங்களுக்கு முக்கியம் என்றால் நாங்கள்தான் விடயங்களை கவனமாக கையாள வேண்டும். தமிழ் பரப்பில் இப்படியும் ஒரு பார்வையுண்டு. அதாவது, ஜே.ஆர்.ஜெயவர்த்தனதான் இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதலை ஏற்படுத்தினார். இருவரையும் மோதவிட்டு அவர் மலை உச்சியிலிருந்து ரசித்துக் கொண்டிருந்தார். அந்தளவிற்கு ஜே.ஆர். சாணக்கியமாக காய் நகர்த்தியிருந்தார் என்பதுதான் இதன் பொருள். அவ்வாறாயின் எங்களிடம் இந்தியாவை ஜே.ஆர் உடன் மோதவிடும் சாணக்கியம் இருந்திருக்கவில்லை என்பதுதானே பொருள். ராஜதந்திர அரசியலில் நாங்கள் பின்தங்கியிருந்துவிட்டு அதற்கான பழியை இன்னொருவரது ராஜதந்திர ஆற்றலின் மீது எவ்வாறு சுமத்த முடியும்?
இப்போது, 2009இற்கு பின்னரான தமிழ் வியூகத்திற்கு வருவோம். 2009வரையில் விடுதலைப் புலிகள் ஒரு சக்தியாக இருந்தனர். சரிகள் பிழைகள் அனைத்துக்கும் அவர்களே பொறுப்பேற்றனர். அதற்கான பரிகாரத்தையும் அவர்களே கண்டனர். அதற்காக கொழும்பின் படையை எதிர்த்து அவர்களே செத்தனர். அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றே எஞ்சியிருந்தது. கடந்த எட்டு வருடங்களில் தமிழர் வியூகம் எந்த நிலையில் இருக்கிறது என்று கணிப்பது மிகவும் அவசியமானது. அது இதுவரை நீங்கள் வாசித்த விடயங்களைவிடவும் மிகவும் முக்கியமானது. இன்று தமிழரின் அரசியல் வியூகம் என்பது கொழும்மை மையப்படுத்தியதோ அல்லது தமிழர்களின அரசியல் எதிர்காலத்திற்கானதோ அல்ல மாறாக, தமிழர்களுக்குள் எவ்வாறு தமிழர்களை வெல்லுவது என்பதுதான் தற்போதைய தமிழர் வியூகம். இந்தப் பொறுப்பை இலங்கை தமிழரசு கட்சி வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. எவ்வாறு கூட்டமைப்புக்குள் வைத்துக் கொண்டே ஏனைய கட்சிகளான முன்னாள் இயக்கங்களை பலவீனப்படுத்துவது. அவர்களது உறுப்பினர்களுக்கு ஆசை காட்டி இழுத்தெடுப்பது, அதற்கான திட்டங்களை வகுப்பது. முதலமைச்சரை இரவோடு இரவாக தூக்குவதற்கு வேலை செய்வது போன்ற விடயங்களில்தான் தற்போது தமிழர்களின் ஆற்றல் செலவிடப்படுகிறது. அண்மையில் வடக்கு மாகாண சபையில் எதிர்கட்சித் தலைவருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இதனை சிலாகித்து சில எழுத்தாளர்கள் உட்பட, முகநூல்களில் பதிவிட்டிருந்தனர் . தவராசா அருமையாக கேள்வி கேட்டிருந்தார். அவர் எப்போதுமே ஆதாரபூர்வமாக பேசுபவர். என்றெல்லாம் புகழ் மாலைகள் சூட்டப்பட்டிருந்தன. கேள்வி? தவராசா என்னும் தமிழர் தனது ஆற்றலை இன்னொரு தமிழரான விக்கினேஸ்வரனுக்கு எதிராக பயன்படுத்தி என்ன பயன்?

அரசியலில் ஒவ்வொருவரும் தங்களுக்கு சரியென்னும் முடிவை கொண்டிருப்பதற்கான சூழலையே ஜனநாயகம் என்கிறோம். அந்த வகையில் தவராசாவிடம் மாறுபட்ட நிலைப்பாடுகள் இருக்கலாம். அதற்காக அவர் விவாதிக்கலாம். அதெல்லாம் சரியே! ஆனால் தாங்கள் சார்ந்த கட்சியின் நிலைப்பாடுகளால் தாங்கள் சாதித்தவைகள் என்ன என்னும் கேள்வியையும் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். தங்களால் எந்தளவிற்கு தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை பெற்றுக் கொடுக்க முடிந்தது என்னும் கேள்விக்கும் பதில் தேட வேண்டும். விக்கினேஸ்வரனை விடுவோம். கூட்டமைப்பையும் விடுவோம். அவர்கள் எதிர்ப்பரசியல் செய்கிறார்கள். அவர்களை கொழும்பு கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியோ அரசாங்கத்துடன் சேர்ந்தியங்குவதையே ஒரு கொள்கையாக பின்பற்றி வருகிறது. விடுதலைப் புலிகள் போராடுகின்ற போதும் அது அரசாங்கங்களுடன்தான் சீவித்தது. ஆனாலும் வடக்கிற்கு ஒரு தமிழ் ஆளுனரை நியமிப்பதில் கூட ஈ.பி.டி.பியால் வெற்றிபெற முடியவில்லை. தமிழ் மக்கள் முதன்மையாக வாழும் ஒரு இடத்திற்கு ஒரு தமிழரை ஏன் ஆளுனராக நியமிக்க முடியாதென்று இவர்கள் இதுவரை அரசாங்கத்தை கேட்டதில்லை. ஏனென்றால் இவர்கள் கேட்டு அரசாங்கம் செய்யப் போவதில்லை. அரசாங்கத்துடன் அப்படியே இழுபட்டுச் செல்வதாலும் எதையும் சாதிக்க முடியாது என்பதுதானே இவர்களது கடந்தகால அனுபவம். இந்த நிலையில் மற்றவர்களை பார்த்து நீங்கள் என்ன செய்தீர்களென்று கேட்பதில் என்ன வித்துவம் இருக்கிறது? உண்மையில் இன்று எங்களின் ஆற்றல் எங்களுக்குள் மோதுவதற்கும், எங்களுக்குள் இருக்கும் எங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு நெருக்கடிகளை கொடுப்பதற்குத்தானே பயன்படுகிறது? அந்த வகையில் இப்போது தமிழர்களுக்குள் வகுக்கப்படும் அனைத்து வியூகங்களும் தமிழர்களை எப்படி விழுத்தலாம் என்பதற்கே பயன்படுகிறது. இதற்குத்தான் தமிழரசு கட்சி தலைமையேற்றிருக்கிறது. ஒரு வேளை தமிழரசு கட்சியில் இருக்கும் தந்தை செல்வாவின் மீது உண்மையான பற்றுக் கொண்டவர்கள் விழிப்படைந்தால் அன்றி இந்த அனர்த்தத்தை தடுக்கமுடியுமென்று தோன்றவில்லை. தங்களை தாங்களே வீழ்த்திக் கொள்வதற்காக மல்லுக்கட்டும் ஒரு சமூகத்தை விழுத்துவதற்காக எதிரிகள் வெளியில் இருந்து வரவேண்டியதில்லை.


0 Comments