க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியல் பட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியாகவில்லையென்பது ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் இதனால் அந்த பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் வீணாக குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லையெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இரசாயனவியல் பட பரீட்சையின் போது வினாத்தாளில் காணப்பட்ட கேள்விகள் சில கம்பஹா பகுதியில் பரீட்சை முடிவடைந்தவுடன் ஆசிரியர் ஒருவரினால் விநியோகிக்கப்பட்ட கையேட்டில் காணப்பட்ட நிலையில் குறித்த வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியானதா என்ற சந்தேகங்கள் எழுந்திருந்தன.
இதனை தொடர்ந்து பரீட்சைகள் திணைக்களமும் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை நடத்தி வந்த நிலையில் இதன்போது அது தொடர்பாக சில விடயங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி பரீட்சைக்கு முன்னரே வினாத்தாள் வெளியாகவில்லையெனவும் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருந்த போது பரீட்சை மண்டபத்தில் இருந்த ஒருவரினூடாக வினாத்தாளில் காணப்பட்ட சில கேள்விகளை அறிந்து பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருந்த போதுதான் குறித்த துண்டுபிரசுரம் அச்சிடப்பட்டுளளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சினால் நேற்று மாலை அறிக்கையொன்றினூடாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆகவே இரசாயனவியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியானதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லையெனவும் அது தொடர்பாக பரீட்சார்த்திகள் வீண் குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments