பொறுப்புகூறும் விடயத்தில் அரசாங்கம் மிகவும் தெளிவுடனும், கலவரமடையாமலும் தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் மெதுவான பயணத்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார். ஊடக பிரதானிகளுடனான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை நடைபெற்றது. இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
|
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் வாக்குறுதியளித்தபடி பொறுப்பு கூறும் விடயத்தில் எதுவித முன்னேற்றமும் காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன? என ஜனாதிபதியிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
' பொறுப்பு கூறல் விடயத்தில் அரசாங்கம் தெளிவான கொள்கையை கொண்டிருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆலோசனைகள் தொடர்பாக நாம் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். இந்த விடயத்தில் தெளிவாக ஒன்றை அவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். அதாவது இந்த நாட்டின் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பாக கவனத்தில் எடுத்துக் கொள்வதுடன் எமது நாட்டுக்கு ஏற்ற விதத்தில் தான் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி பயணிப்போம் என்பதையும் அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறோம். அத்துடன் எந்நேரமும் எமது நாட்டின் இறைமையை பாதுகாத்துக் கொண்டுதான் எமது முன்னெடுப்புகள் இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறோம்.
சிவில் யுத்தங்கள் நடைபெற்ற நாடுகளில் ஒருபோதும் ஒரு சில நாட்களில் அல்லது இரண்டொரு மாதங்களில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் சென்றிருக்கிறது. எனவே தேவையான இலக்கை அடைய மிக அமைதியான பயணத்தையே மேற்கொள்கிறோம்.கலவரமடைந்த பயணமல்ல. எந்தப் பிரச்சினைக்கும் துரிதமான, வேகமான பயணத்தினால் தீர்வு கிடைக்கப் போவதில்லை எமது அமைதியான மெதுவான தெளிவான பயணத்தின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியும் என்பதே எமது நம்பிக்கை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
|
0 Comments