Advertisement

Responsive Advertisement

14 வயது சிறுவன் மீது ஓமந்தை பொலிசார் காட்டுமிராண்டித்தனம்: சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா, ஓமந்தை பொலிஸார் தாக்கியதாக தெரிவித்து 14 வயது சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தை சேர்ந்த சிறுவனே தனது தம்பியுடன் அரசமுறிப்பு குளப்பகுதியில் மாட்டை பிடித்து கட்ட சென்ற சமயம் இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக குறித்த சிறுவனும் தாயாரும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான சிறுவன் தெரிவிக்கையில்,
தானும் 7 வயதுடைய தம்பியும் அரசமுறிப்பு குளத்தினுள் தமது மாட்டை கட்டச்சென்ற சமயம் அங்கு சிவில் உடையில் வந்த 4 பொலிஸார் தன்னை முழங்காலில் இருக்குமாறு பணித்ததுடன் முதுகில் அடித்ததாகவும் பின்னர் கழுத்தில் கயிற்றைப்போட்டு தூக்கப்போவதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து எனது தம்பி ஓடிச்சென்று அக்காவிடம் சம்பவத்தை தெரிவிதததை அடுத்து அக்கா மற்றும் அம்மா அப்பா வந்து என்னை மீட்டுவந்தனர். எனக்கு உடல் வருத்தமாக இருப்பதால் வைத்திசாலைக்கு வந்தேன் என தெரிவித்தார்.
இதேவேளை தாயார் கருத்து தெரிவிக்கையில்,
நாம் மாடு வளர்க்கின்றோம். எமது மாடே குளப்பகுதிக்கு ஓடிச்சென்றுள்ளது. அதனை கட்ட எனது மகன் சென்றுள்ளான். அப்போது அங்கு சிவில் உடையில் வந்த 4 பொலிஸார் எனது மகன் மீது கள்ளமாடு பிடிப்பதாக தெரிவித்து அடித்துள்ளனர்.
நாம் சம்பவ இடத்திற்கு சென்றதும் பொலிஸார் அருகில் உள்ள வீடொன்றிற்கு சென்று இளநீர் குடித்து விட்டு 2 மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டனர். எனது மகன் தற்போது அச்சமான மன நிலையில் உள்ளான். அந்த சம்பவத்தில் இருந்து அவன் இன்னும் மீள்வில்லை;. நானும் எனது கணவரும் கூலி வேலை செய்தே எமது 5 பிள்ளைகளையும் வளர்க்கின்றோம். இவ்வாறான நிலையில் எனது பிள்ளைகளுக்கு அவ்வாறு அடிக்க நான் பார்த்திருக்கமுடியாது. எனவே ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய அழைத்து சென்றேன். எனினும் அவர்கள் தாம் அவ்வாறு தாக்கவில்லை என தெரிவித்தனர்.
உடனடியாக நான் மகனை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளேன். இந் நிலையில் மகனை வைத்திசாலையில் அனுமதிக்கவேண்டாம் என கிராம சேவகர் எனக்கு தொலைபேசியில் மிரட்டுகின்றார். பின் விளைவுகள் தொடர்பில் யோசிக்குமாறு கிராம சேவகர் தெரிவிக்கின்றார்.
இதன் காரணமாக எனக்கு அச்சமாக உள்ளது. பின் விளைவுகள் என்பது என்ன என்பதே தெரியாதுள்ளது. 5 பிள்ளைகள் உள்ளனர். ஏதாவது பிரச்சனைகள் ஏற்படுமா என்பது தெரியாதுள்ளதுஎன தெரிவித்தார்.
இது தொடர்பாக ஓமந்தை பொலிஸாரிடம் கேட்டபோது தாமது பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவரும் தாக்கவில்லை என தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments