மயிலிட்டித் துறைமுகம் மற்றும் அதனோடு இணைந்த 54.6 ஏக்கர் நிலப்பரப்பு என்பன எதிர்வரும் 3 ஆம் திகதி மக்களிடம் மீள ஒப்படைக்கப்படவுள்ளது.
27 வருட இடப்பெயர்வு வாழ்வின் பின்னர் மயிலிட்டி மக்கள் தமது சொந்த மண்ணை மிதிக்கவுள்ளனர்.
மயிலிட்டித் துறைமுகம் விடுவிக்கப்படுகின்ற தகவல், யாழ்ப்பாண மாவட்டக் கட்டளைத் தளபதியால், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு நேற்று மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி மயிலிட்டி மக்கள் போர் காரணமாக இடம்பெயர்ந்தனர். தமது துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை விடுவிக்குமாறு கோரி பல்வேறு போராட்டங்களையும் நடத்தியிருந்தனர்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர், உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்தன. மயிலிட்டிப் பிரதேசத்தில் ஆயுதக் கிடங்கு இருப்பதன் காரணமாவே அந்தப் பகுதியை விடுவிப்பதில் படைத் தரப்பினர் தாமதம் காட்டி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
விரைவில் மயிலிட்டித் துறைமுகம் விடுவிக்கப்படும் என்று தமக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தாக, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில், மயிலிட்டித் துறைமுகம் மற்றும் அதனோடு இணைந்த 54.6 ஏக்கர் நிலப் பரப்பை விடுவிக்க பாதுகாப்புத் தரப்பினர் இணங்கியுள்ளனர்.
0 Comments