தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 31வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் தமிழ் தேசிய ஒற்றுமை வாரமும் நேற்று (6) சனிக்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
ரெலோ இயக்கத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலிக் கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன், ரெலோ இயக்க செயலாளரும், முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான என்.சிறிகாந்தா, வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், செ. மயூரன், இ.இந்திராசா, ம.தியாகராசா, க.சிவநேசன், புவனேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கருணாகரன் (ஜெனா), வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் கிஷோர் சுகந்தி, கட்சிப் பிரதிநிதிகள் எனப் பலரும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
ரெலோ இயக்கத்தின் ஸ்தாபக தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் 1983இல் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ரெலோ இயக்கத்தின் தலைவராக சிறி சபாரத்தினம் செயற்பட்டு வந்த வேளையில் 1986 ஏப்ரல் மாத இறுதியில் போராட்ட இயக்கங்களுக்கிடையில் இடம்பெற்ற பரஸ்பர மோதல் காரணமாக பல இயக்க போராளிகள் கொல்லப்பட்டதுடன் மே மாதம் ஆறாம் திகதி ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம் கொல்லப்பட்டிருந்தார். கொலை செய்யப்பட்ட சிறி சபாரத்தினம் மற்றும் இயக்க போராளிகள் அக்காலத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவு நாளை ரெலோ அமைப்பினர் வருடந்தோறும் மே மாதம் ஆறாம் திகதி அனுஷ்டித்து வருகின்றதுடன் ஏப்ரல் 29ம் திகதியிலிருந்து மே மாதம் ஆறாம் திகதி வரை தமிழ் தேசிய ஒற்றுமை வாரமாகவும் பிரகடனப்படுத்தி நினைவு கூர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments: