Advertisement

Responsive Advertisement

காணிகளை 7 நாட்களுக்குள் விடுவிக்காவிட்டால்...! - கேப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை!

படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை ஏழு நாட்களுக்குள் விடுவிக்காவிட்டால் தங்களது போராட்ட வடிவத்தை மாற்றி தீவிரப்படுத்தவுள்ளதாக முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பூர்வீக கிராம மக்கள் எச்சரித்துள்ளனர். தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு இன்று 27 நாட்களை எட்டியுள்ளது.
இந்நிலையில், தமது போராட்டத்தின் ஓர் அங்கமாக நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மேற்குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளனர். மக்களின் நில மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்தோடு, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்ததோடு, மக்களால் முன்னெடுக்கப்பட்ட கவனீர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தனர். தமது பூர்வீக காணிகளில் இராணுவம் உல்லாச வாழ்க்கை வாழ, தாம் வீதியில் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இம் மக்கள், தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments