மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகவும் விருப்பத்துடனும் பலநோக்கங்களை மனதில் கொண்டுமே என்னை ஜனாதிபதியாக்கியிருக்கிறார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
என்னை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகவும் விருப்பத்துடன் செயற்பட்டிருந்தார்கள். அனைத்து மக்களும் பல நோக்கங்களை மனத்தில் வைத்துக் கொண்டுதான் என்னை ஜனாதிபதியாக்கினார்கள்.
எமது நாட்டில் மிகவும் நீண்டகாலமாக நிலவி வந்த யுத்தத்தின் காரணத்தினால் வடக்கு கிழக்கு மக்கள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வந்திருந்தார்கள்.
யுத்தத்தின் பாதிப்புக்கள் நாடு பூராகவும் ஏற்பட்டிருந்தன. யுத்தத்திற்கு பின்னர் இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த சேவை செய்வேன் என்ற எண்ணக்கருவில்தான் இந்த நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தார்கள்.
இந்த நாட்டில் அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழவேண்டும், சமாதானத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஏற்படாத வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்.
இதற்காகத்தான் எமது அரசாங்கம் மிகவும் பாடுபட்டு செயற்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக நாங்கள் புதியதொரு அரசியலமைப்பை ஏற்படுத்திக் கொண்டு போகின்றோம்.
சிலர் இதனை தவறாகவும், பொய்யாகவும் பேசுகின்றார்கள். நாங்கள் நாட்டை உடைக்கப்போகின்றோம், பிரிக்கப்போகின்றோம், நிர்மூலமாக்கப் போகின்றோம், வெளிநாட்டுச் சக்திகளுக்கு அடிபணிந்து விட்டோம், என சிலர் கூறுகின்றார்கள்.
இவையனைத்தையும் நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். ஒரே நாட்டிற்குள் பிளவுபடாமல் சமாதானத்துடன் வாழ வேண்டும் அதற்காகத்தான் அரசியலமைப்பை உருவாக்கிக் கொண்டு போகின்றோம் என எதிர்க் கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அந்த உத்தமமான நோக்கத்தை அடைவதற்காக அரசாங்கம் என்ற வகையில் பணியாற்றி வருகின்றோம். எதிர்வரும் சில மாதங்களுக்குள் சில அடிப்படை வேலைகளை முடிக்கத்தயாராக இருக்கின்றோம்.
மாகாணசபைகளை ஏற்படுத்தும் காலகட்டத்தில் நாட்டில் என்ன நடந்தன என்று மக்களுக்கு தற்போது ஞாபகம் இருக்கலாம். மாகாணசபைகளை உருவாக்கும் சட்டத்தைக் கொண்டு வரும்போது ஒருமாகாண சபையிலிருந்து இன்னுமொரு மாகாண சபைக்கு போவதற்கு வீசா எடுக்க வேண்டும் என பலர் சொன்னார்கள்.
மாகாணசபை சட்டத்தை அங்கீகரிப்பதற்கு முன்னர் வெளிவந்த பத்திரிகைகளை தற்போது எடுத்துப் பாருங்கள். இன்று எவ்வாறு சத்தம் போடுகின்றார்களோ அவ்வாறு தான் அன்றும் கூக்குரலிட்டார்கள்.
ஏற்கனவே இந்த நாட்டுக்குள் வாழ்கின்ற அனைவரையும் ஒன்றுபடுத்துவதற்காகத்தான் நாங்கள் படியாற்றி வருகின்றோம். சாந்தியும், சமாதானத்தையும், நன்றாக பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைந்த நாடாகவும் நாட்டை மாற்றவேண்டும்.
அன்று நான் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜெய்கா திட்டங்கள் தற்போது திறந்து வைக்கப்படுகின்றன.
4 திட்டங்களுக்காக 5,232 மில்லியன் ரூபாவை ஜப்பானிடம் இருந்த நாங்கள் பெற்றிருக்கின்றோம். இந்த நாட்டில் சுகாதார சேவையை மேம்படுத்த அரசாங்கம் என்ற ரீதியில் மென்மேலும் பணியாற்ற இருக்கின்றோம்.
நாட்டின் அபிவிருத்திக்கு சுகாதாரமும், கல்வியும், உயர்ந்தால் தான் அந்த நாடு முன்னேற்றமடையும், கல்வியறிவுள்ளவர்களாகவும், நோயற்ற மக்களும், வாழ்ந்தால் தான் அந்த நாடு முன்னேற்றம் அடையும்.
சுகாதாரம், கல்வி, மற்றும் கமத்தொழில் ஆகியவற்றுக்காக வேண்டி கிழக்கில் பெரும்பணியாற்ற தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் சில வருடங்களில் கிழக்கிலுள்ள அனைத்துக் குறைபாடுகளும் முடிவிற்கு கொண்டுவரப்படும்.
அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள எழுகின்றன. இந்த நாடு சுதந்திரமான நாடு என்ற வகையில் அரசாங்கத்தைப் பார்த்து யாருக்கும் விமர்சிக்க முடியும்.
கூடுதலான விமர்சசனங்கள்தான் அதிகளவு மக்களுக்குப் பணியாற்றும் எமது சக்தியாகும். அரசாங்கத்தை வீழ்த்திவிடுவேம் என சிலர் சொல்கின்றார்கள்.
இதுபற்றி சிலர் கனவுகள் காணுகின்றார்கள். அவர்களது கனவுகள் ஒருபோதும் நனவாகமாட்டாது. அரசாங்கம் என்ற வகையில் பாரிய சக்தியோடு நாம் முன்னே செல்வோம் எங்களை முறியடிக்கயாராலும் முடியாது என இதன் போது சுட்டிக்காட்டினார்.
இதுபோன்று எல்லா நாடுகளிலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. கடந்த காலங்களில் பணியாற்றியதை விட இன்னும் நாம் துரிதமாகப் பணியாற்றி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்வு கிடைக்கும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments