Advertisement

Responsive Advertisement

வடக்கு – கிழக்கில் தீவிரமடையும் மக்கள் போராட்டங்கள்!

மஹிந்தா அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்த நாட்டில் தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் வீதிக்கு வந்து போராடியிருந்தனர். புலனாய்வாளர்கள், இராணுவத்தினர், பொலிசார் என பலதரப்பட்ட அச்சுறுத்தல்களையும் அவர்கள் கடந்திருந்தனர். மக்கள் போராட்டங்களுக்கு துணையாக தமிழ் தேசியக் கூட்டடைப்பினர், தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர் ஆகியோரும் வீதியில் இறங்கியிருந்தனர். யுத்தத்தின் போது மஹிந்த அரசாங்கம் மேற்கொண்ட போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட அடக்குமுறை ஆட்சி தொடர்பாகவும் தமிழ் மக்கள் குரல் கொடுக்க தவறவில்லை. அதேநேரம் இந்த மஹிந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்திருந்தனர். இதன் விளைவாகவே 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது யுத்தத்தின் போது இராணுவத் தளபதியாக செயற்பட்ட சரத்பொன்சேகா போட்டியிட்ட போதும் தமிழ் மக்களின் வாக்கு அவருக்கு கிடைத்திருந்தது. இருப்பினும் அப்போதைய அரசியல் நிலமை மற்றும் சூழ்ச்சிகள் காரணமாக சரத்பொன்சேகாவால் வெல்ல முடியவில்லை. அதன் பின் 2015 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி தேர்தல் வந்த போது தமிழ் பேசும் மக்கள் ஒட்டுமொத்தமாக அணிதிரண்டு மஹிந்தவுக்கு எதிராக தமது இறைமையை பயன்படுத்தி தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவருவதற்கு உழைத்திருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.
தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதவழிப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், 65 வருட காலத்திற்கு மேலாக இடம்பெற்று வரும் தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா என்ற ஆதங்கத்துடன் இருந்த தமிழ் மக்கள் சர்வதேச சமூகம் தமக்கான ஒரு தீர்வைப் பெற்றுத் தரும் என நம்பியிருந்தனர். இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு மஹிந்த அரசாங்கத்திற்கு உதவிய சர்வதேச சமூகம் தாம் எதிர்பார்த்த மற்றும் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை மஹிந்தா அரசாங்கம் நிறைவேற்றாமையால் அந்த ஆட்சி மீது அதிருப்தி கொண்டவர்களாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி மஹிந்த அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடிகளை ஐ.நா ஊடாக கொடுத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தி தென்னிலைங்கையின் பிரதான அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து இந்த நல்லாட்சி என கூறும் அரசாங்கத்தை உருவாக்கியிருந்தனர்.
மஹிந்த மீது ஏற்பட்ட அதிருப்தி, சர்வதேசத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கை என்பன காரணமாக தமிழ் தேசிய இனம் இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்து தமது பிரச்சனை தீர்க்கப்படும் என நம்பியிருந்தனர். ஆனால் இரண்டு வருடங்கள் கடந்தும் தமிழ் தேசிய இனம் இந்த ஆட்சி மாற்றத்தால் அடைந்த நன்மை என்ன எனும் போது அதனைத் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் தலைமை என்று கூறக் கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவி, அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவர் பதவி என பதவிகள் கிடைத்திருக்கின்றது. அந்த பதவிகளைக் கொண்டு தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய முடிந்துள்ளதா என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது. ஏனெனில், கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று திட்டமிட்ட குடியேற்றங்கள், பௌத்தமயமாக்கள், விகிதாசார குறைப்பு என்பன சூட்சுமாக இடம்பெற்று வருவதுடன், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் கூட இன்னும் தீர்க்கப்படாத நிலையிலேயே இருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிவிடுவிப்பு என்பன தற்போதும் கானல் நீராகவே உள்ளது. ஆங்காங்கே சில சில காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் அவை முழுமையானதாகவோ, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாகவோ இடம்பெறவில்லை. வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் கூட தமிழ் மக்கள் நலன்சார்ந்ததாக மேற்கொள்ளப்படவில்லை. இதனாலயே இந்த அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தளர்ந்து போயிருக்கின்றது.
இந்த நேரத்தில் தமக்குள்ள பதவிகளைக்கொண்டு சர்வசே இராஜதந்திர நகர்வுகள் ஊடாகவும், நேரடியாகவும் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கடுமையாக உழைக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக அதன் தலைமை அதை செய்கின்றதா என்ற கேள்வி மக்களிடம் எழுந்திருக்கின்றது. இதுதவிர, இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மக்கள் அணிதிரட்டல்களை செய்து ஜனநாயக போராட்டங்களையும் முன்னெடுக்கத் தவறி வருகின்றது. இதனால் இந்த அரசாங்கத்தின் மீது மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீதும் அதிருப்தி கொண்ட தமிழ் மக்கள் தாமாகவே வீதிக்கு இறங்க முற்பட்டுள்ளார்கள். தமது உரிமைகளையும், தமது அபிலாசைகளையும் முன்வைத்து தாமாகவே அதனை போராடி பெற வேண்டிய நிலைக்கு மேய்ப்பார் அற்ற மந்தைகள் போல் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையிலேயே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், அவர்களது நியாயமான கோரிக்கைகளையும் சர்வதேசத்திற்கும், இந்த அரசாங்கத்திற்கும் வலியுறுத்தும் முகமாகவும், தமிழ் தலைமைகளை காத்திரமாக செயற்பட வைக்கும் முகமாகவும் சிவில் சமூக செயற்பட்டாளர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், கல்வி மான்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என பல ஒன்றிணைந்து முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருந்தனர். இது ஒரு அரசியல் கட்சியாக அல்லாது பொதுமக்கள் சார்ந்த ஒரு அமைப்பாகவும் ஒரு அழுத்த சக்தியாகவும் தொழிப்பட்டு வருகிறது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த செப்ரெம்பர் 24 ஆம் திகதி யாழ் முற்றவெளியில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி இடம்பெற்றது. இதன்போது வடக்கின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த மக்கள் கூட்டங்களால் முற்றவெளி மைதானம் நிறைந்து வழிந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது உரிமைக் குரலை உரக்க கூறியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசத்தின் கிழக்கு மாகாணத்தில் அடுத்த எழுக தமிழ் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழ் மக்கள் உரிமை சார்ந்த ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்க தமிழ் தலைமைகள் முன்வராத நிலையில் இந்த அரசாங்கத்தாலும் கடந்த ஆடசியைப் போன்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தாமாகவே வீதியில் இறங்கிப் போராட முனைந்தனர். வவுனியாவில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை தாமாகவே முன்வந்து மேற்கொண்டிருந்தனர். அந்த போராட்டம் நான்காவது நாளில் மக்கள் போராட்டமாக இந்தியாவின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிய போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நேரடியாக வந்து வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அந்த போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பின் அந்த வாக்குறுதியின் அடிப்படையில் கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் 15 பேர் அரச தரப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டனர். இதன்போது அரச தரப்புடன் இணைந்து அந்த சந்திப்புக்காக சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் காணாமல் போனவர்களின் உறவுகளினால் அந்தக் கலந்துரையாடலில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். இது இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கேப்பாபுலவு- புலக்குடியிருப்பு மக்கள், புதுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இராணுவத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று வாரங்களைக் கடந்தும் இந்த போராட்டம் தொடர்பில் அரசாங்கத்தாலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பாலோ காத்திரமான எந்தவொரு நடவடிக்கையும் எடுத்தததாக தெரியவில்லை. தற்போது கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் காணி விடுதலை கோரியும், கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் உறவுகள் காணாமல் போனவர்களுக்கு பதில் கோரியும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த போராட்டங்கள் குறித்து அரசாங்கம் உதாசீனம் செய்தால் இந்த மக்கள் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து விரும்பதகாத விளைவுகளை ஏற்படுத்தும். அது இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கும், அதற்கு ஆதரவாக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆரோக்கியமானதாக இருக்காது. ஏனெனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் விரக்தியின் உச்சத்தில் சாகக் கூட துணிந்த நிலையில் உள்ளதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதனை இந்த அரசாங்கமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான ஒரு நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும், தமிழ் தலைமைகளே குழப்பவாதிகளாக செயற்பட்ட நிலையிலும் தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் பேரணி மட்டக்களப்பு நாவற்குடாவில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றிருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக திரண்டு வந்து தமது அபிலாசைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் அந்த பேரணியில் முன்வைத்திருந்ததுடன் அதனை கோசமாகவும் எழுப்பியிருந்தனர். வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஸ்டி அடைப்படையிலான தீர்வு என்பவற்றையும் அந்த பேரணி வலியுறுத்தியிருந்தது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணிகளும், தற்போது வீதியில் இறங்கி போராடும் மக்கள் போராட்டங்களும் மக்கள் தமது உரிமை விடயத்திலும், அரசியல் அபிலாசை தொடர்பிலும் தெளிவாகவும், உறுதியதகவும் இருக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது. போரில் தோல்வியடைந்த பின்னரும் தமிழ் மக்கள் தமக்கான அரசியல் உரிமைப் போராட்டத்தில் தோற்றுப் போக தயாராகவில்லை என்பதையும், தமது உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க தயாராக இருக்கின்றார்கள் என்பதையும் இவை வெளிப்படுத்தியிருக்கின்றன.
தற்போதைய சூழலில் மக்கள் ஜனநாயக ரீதியாக போராடக் கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையும் ஒரு காரணம். இந்த நிலையில் மக்கள் தமக்கான கோரிக்கைகளை முன்வைத்து தமக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர். காணாமல் போனோரின் உறுவுகளின் பேராட்டத்திற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இடம்பெற்ற சந்திப்புக்கு கூட தோல்வியில் முடிவடைந்துள்ளதால் அவர்கள் கூட மீள தமது போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிகிறது. ஆக, இந்த அரசாங்கமும் தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகள் குறித்து சிந்தித்து செயற்படாத நிலையில் மக்கள் போராட்டங்கள் தீவிரம் பெறுவதை தடுக்க முடியாத நிலையே ஏற்படும். இதனை இந்த நல்லாட்சி அரசாங்கம் புரிந்து கொண்டு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அல்லது அதனை தக்க வைப்பது ஆட்சியாளர்களின் கையிலேயே தங்கியுள்ளது.

Post a Comment

0 Comments