அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பிக்குகளின் அடாவடியால் சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழ்வதாக குறிப்பிட்ட அவர்கள், சிங்கள மக்கள் வாழாத இடங்களில் விகாரை அமைப்பதற்கும் ஆட்சேபனையும் வெளியிட்டனர்.
பாராளுமன்றத்தில் பெளத்த, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதம் நேற்று நடைபெற்றது. இதன் போது முஸ்லிம் அமைச்சர்கள், தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள், அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள இன முறுகல் குறித்து கருத்து வெளியிட்டனர்.
தமிழ், முஸ்லிம் எம்.பிக்களின் உரைகளுக்கு அவ்வப்போது இடையூறு செய்த நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அதற்கான தமது தரப்பு விளக்கங்களை முன்வைத்தார்.
இந்த விவாதங்களின் போது, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்குமிடையில் சூடான வாதம் இடம்பெற்றது. நேற்றைய விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ பௌத்த விகாரரை கட்டுவதற்கு எதிரான குற்றச்சாட்டு பற்றியும் இன நல்லுறவு பற்றியும் கருத்து வெளியிட்டார்.
இதன் போது குறுக்கீடு செய்த ஸ்ரீதரன் எம்.பி. வடக்கில் பௌத்த விகாரை கட்டாதே என வடக்கு முதலமைச்சர் கூறவில்லை. சிங்கள மக்கள் இல்லாத பகுதிகளில் விகாரை அமைக்கக் கூடாது என்பதே அவர்களின் கோரிக்கை என்றார். இதற்கு அமைச்சர் பதிலளித்தார்.
அமைச்சரின் உரைக்கு குறுக்கீடு செய்த வியாழேந்திரன் எம்.பி. நாம் பௌத்த மதத்தை மதிக்கிறோம். ஆனால் நீதிமன்ற உத்தரவை கிழித்து, தனியார் காணிக்குள் அடாவடியாக நுழைந்து அடாவடித்தனத்தில் ஈடுபடும் பிக்கு இது வரை கைது செய்யப்படவில்லை. இவர் தமிழ் முஸ்லிம் மக்களை கேவலமாகப் பேசி வருகிறார் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், 24 மணி நேரத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அங்கு நடந்தவை குறித்து கவலை அடைகிறோம். சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தி இவற்றை தடுக்க முடியும். ஆனால் சகலரையும் ஒரே மேடையில் அமர்த்தி பேசி தீர்க்க முயல்கிறோம் என்றார்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய எஸ். யோகேஸ்வரன் எம்.பி. மட்டக்களப்பு விகாராதிபதி அடாவடித்தனம் செய்தாலும் கோயில் பூசகர்களுக்கே நீதிமன்றம். அழைப்பாணை அனுப்பியுள்ளது. இவரை தடுக்க பொலிஸார் தயாராக இல்லை. இன, மத. முறுகல் நிலை ஏற்படுத்தும் பிக்குவை வடக்கு கிழக்கிற்கு வெளியில் உள்ள விகாரரைக்கு அனுப்புமாறு கோரினார்.
மத விவகார அமைச்சர்கள் இணைந்து பேச்சு மூலம் இன்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முயல்கிறோம். இல்லாவிட்டால் பிரச்சினை, குட்டி போட்டு மேலும் விஸ்தரிக்கும் என அமைச்சர் இதன்போது பதிலளித்தார்.
இதன் போது குறுக்கீடு செய்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பேச்சுவார்த்தையூடாக பிரச்சினைக்கு தீர்பு காண முயற்சி முன்னெடுக்கப்படுவதாக கூறினாலும் குறித்த பிக்கு மீண்டும் முஸ்லிம்களையும் குர்ஆனையும் விமர்சித்துள்ளார். இந்நிலையில் எப்படி சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» பிக்குகளின் அடாவடி தொடர்பாக பாராளுமன்றத்தில் தமிழ் , முஸ்லிம் எம்.பிக்கள் காரசாரமான விவாதம்
பிக்குகளின் அடாவடி தொடர்பாக பாராளுமன்றத்தில் தமிழ் , முஸ்லிம் எம்.பிக்கள் காரசாரமான விவாதம்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: