வடக்கில் மக்களின் காணிகளை விடுவிக்கும் போது அதற்கு எதிராக தெற்கில் குரல் எழுப்புபவர்கள் தாங்களும் யுத்தமொன்றில் அவ்வாறு காணிகளை இழந்திருந்தால் அந்த காணி விடுவிப்பு எந்தளவு நியாயமானது என்பதனை புரிந்துக்கொண்டிருப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சு மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்துபவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளை நடத்துவோர் யாரும் வடக்கிற்கு சென்று அம்மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண முயற்சிக்கவில்லை. கொழும்பிலும் தெற்கிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அற்பத்தனமான தேசாபிமானிகளுக்கு அம்மக்கள் 27 வருடங்கள், அதற்கு மேலும் முகாம்களில் வாழ்ந்திருப்பது புரிய வேண்டும்.
இவ்வாறான நிலையில், அம்மக்களுக்கு தீர்வொன்றை வழங்கும் போது, அரசினதும் படையினரதும் காணிகளை அவர்களுக்கு வழங்குவதாக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆனால், தங்களது காணிகளையே வடக்கிலுள்ள மக்கள் திரும்ப கேட்கின்றனர். இங்கு இவற்றுக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் இதே போன்றதொரு யுத்தத்தில் தங்களது காணிகளை இழந்திருக்கும் பட்சத்தில் தான் அந்த காணிகள் விடுவிப்பு எந்தளவு நியாயபூர்வமானது என்பது பற்றி புரியும். என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments