காவி உடையை போர்த்திய அநாகரிக புத்த பிக்கு மட்டு மாவட்டத்திற்கு சாபக்கேடு
காவி உடை தரித்த மட்டக்களப்பு மங்களராம விகாரையின் புத்தபிக்கு அம்பிட்டிய சுமரத்தின தேரரின் காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வாறான அநாகரிக புத்த பிக்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபக்கேடு என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
மட்டக்களப்பு மங்களராம விகாரையின் புத்த பிக்கு அம்பிட்டிய சுமரத்தின தேரர் அம்பாறை-கண்டி பிரதான வீதியிலே கடந்த வெள்ளிக்கிழமை நடந்து கொண்ட விதத்தினைக் கண்டித்து இன்று(13) விக்கப்பட்ட ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவ்வறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவின் பட்டிப்பளை பகுதியில் பிரதேச செயலாளர், கிராம சேவை உத்தியோகத்தர், காரியாலயத்தில் அலுவலர்கள் ஆகியோர் அங்கு சென்ற போது காவி உடையை போர்த்திய அநாகரிக புத்த பிக்குவான அம்பிட்டிய சுமரத்தின தேரர் மிகவும் கீழ்த் தரமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்.
அத்துமீறி காணி அபகரிப்பு செய்வதை தடுக்கும் விதத்தில் நேரடியாக பார்வையிட சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் அங்கு சென்ற போதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த இடத்தில் கடமையில் நின்ற மங்கலோயா பொலிசார் வேடிக்கை பார்த்து நின்றனர்.
இந்த புத்த பிக்கு ஏற்கனவே பல தடவை மட்டக்களப்பில் மாவட்ட அலுவலகம், பட்டிப்பளை பிரதேச செயலகம், ஒருங்குணைப்பு குழுக் கூட்டம் ஆகிய இடங்களில் அத்துமீறி நுளைந்து குழப்பங்களில் ஈடுபட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன.
கடந்த 2014 இல் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் அத்துமீறி பிரவேசித்து பிரதேச செயலாளரை தாக்க முயன்றார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காக்கி உடை தரிக்காத இராணுவ அதிகாரி போன்று இவர் காவி உடை தரித்து தமிழ் மக்கள் மீது இனவாதத்தைக் கட்டவிழ்த்துள்ளார்.
இவ்வாறான இனவாத புத்த மத குருவின் செயல்பாடுகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. நல்லாட்சி அரசு இவரின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் இந்த புத்த பிக்குவை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட பௌத்த மத நிறுவனம் முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments